மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜிக்குஆதரவு கேட்டு அமைச்சர் மூர்த்தி பிரசாரம் * கோரிக்கைகளை நிறைவேற்ற ஜமாஅத் நிர்வாகிகளிடம் உறுதி

மதுரை: மதுரை மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜிக்காக ஜெய்ஹிந்த்புரத்தில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகளிடம் அமைச்சர் மூர்த்தி ஆதரவு திரட்டினார்.

ஜீவாநகரில் நடந்த இந்நிகழ்ச்சியில் 12 ஜமாஅத்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அமைச்சர் பேசியதாவது: தி.மு.க., அரசு சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் முஸ்லிம்களுக்கான கபஸ்தான் கேட்டு 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இரண்டுமுறை அமைச்சராக இருந்த அ.தி.மு.க., வேட்பாளர் செல்லுார் ராஜூ நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஹவுசிங்போர்டு பகுதியில் அதற்கான இடம் ஒதுக்கப்படும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் எனது சொந்த செலவில் ஒரு ஏக்கர் நிலம் வழங்குவேன். இத்தேர்தலில் பாலாஜியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

ஐக்கிய ஜமாஅத் தலைவர் லியாகத் அலிகான், பொருளாளர் பாரூக், துணைமேயர் நாகராஜன், பகுதி செயலாளர் பழனிசாமி, கவுன்சில் லட்சிகாஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேட்பாளர் பிரசாரம் மேற்கு தொகுதி கொடிமங்கலம், மேலமாத்துார், கீழமாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் பாலாஜி பிரசாரம் செய்தார். பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூத்துாவியும் வரவேற்றனர். அவர் பேசுகையில், 10 ஆண்டுகள் அமைச்சர், 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தும் செல்லுார் ராஜூ செய்யாத பல்வேறு பணிகளை அமைச்சர் மூர்த்தி செய்துள்ளார். நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதிய ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் தொடரும்'' என்றார்.

Advertisement