அறிவிப்புக்கு முன் தண்ணீர் நிறுத்தம் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

ஈரோடு: அறிவிப்புக்கு முன் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், காளிங்கராயன் பாசன கடைமடை பகுதி விவசாயிகள், தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் திறக்கப்படும் நீர், பவானி ஆறு மூலம் காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் திருப்பி விடப்படும். இந்த பாசன நீர் மூலம், 15,600 ஏக்கர் நிலங்களுக்கு மேல் பாசனம் பெறுகிறது. வாய்க்காலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 15 முதல் ஏப்., 30 வரை தண்ணீர் திறக்கப்படும்.

இந்தாண்டு, 5 கி.மீ., துாரத்துக்கு பராமரிப்பு பணி, பாலம் அமைத்தல், சிமென்ட் தளம், கரை அமைக்கும் பணிக்கு, 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பாசன விவசாயிகள், பல கட்ட போராட்டத்தால் ஏப்., 15ம் தேதி வரை தண்ணீர் திறக்க நீர் வளத்துறை அதிகாரிகள் சம்மதித்தனர். ஆனால், ஏப்ரல் 7ல் தண்ணீரை நிறுத்தி, 9 மற்றும் 10ல் கடைமடைக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து, காளிங்கராயன் பாசன விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் சேதுராஜ் கூறியதாவது:

அறிவித்தபடி வரும், 15ம் தேதி வரை தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் முன்னதாகவே நிறுத்தியதால் கடைமடையில் பல நுாறு ஏக்கர் நெல், வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர் காய்கிறது. இதனால், ஒரு ஏக்கர் நெல் வயலை இன்று உழவு செய்து, அழித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். வரும், 15ல் ஒரு ஏக்கர் கரும்பை தீயிட்டு அழித்தும், 16ல் இலங்கை துாதரகம் சென்று, 'விவசாயிகளை வாழவிடாமல் அரசும், அரசு அதிகாரிகளும் செயல்படுவதால், இலங்கையில் அகதியாக வாழ விரும்புகிறோம்' என்று மனு வழங்க உள்ளோம்.

இவ்வாறு கூறினார்.

Advertisement