விருதுநகரில் வியாபாரிகளுக்கு உதவியாக லாரிகள் முனையம் அமைக்கப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் வி.ஜி.கணேசன் உறுதி

விருதுநகர்: விருதுநகரில் வியாபாரிகளுக்கு உதவியாக லாரிகள் முனையம் அமைக்கப்படும் என அதிமுக வேட்பாளர் வி.ஜி.கணேசன் பிரசாரத்தின் போது உறுதி கூறினார்.

விருதுநகர் பகுதியில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: விருதுநகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். சொத்து வரி, மின்சார கட்டணத்தை குறைக்க முயற்சிகள் செய்வேன். 10 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்ட இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுப்பதோடு ரோடுகளை சீரமைக்கவும், நகரில் பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

விருதுநகரில் வியாபாரிகளுக்கு உதவியாக லாரிகள் முனையம் அமைக்கப்படும். எண்ணெய் வியாபாரம் அதிகம் உள்ள விருதுநகர் பகுதியில் வேளாண் துறை உதவியுடன் எண்ணெய் வித்து சாகுபடி மேம்படுத்தப்படும். சிறு வியாபாரிகளின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபாரியாகிய எனக்கு வியாபாரிகள் மாநில சரக்கு சேவை வரி விதிப்பில் ஏற்படும் துயரங்கள் நன்கு தெரியும். அந்த துயரங்களை போக்க நடவடிக்கை எடுப்பேன். விருதுநகரில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி, கலை கல்லுாரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர் தொகுதியில் ஏழை எளிய பெற்றோரை இழந்த ஆயிரம் குழந்தைகளை என் சொந்த செலவில் கல்லுாரி படிப்பு வரை படிக்க வைப்பேன், என்றார்.

ஒன்றிய செயலாளர் கண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நாகராஜன், நிர்வாகிகள் கணேசன் மூர்த்தி, பிச்சை மணி, முத்து பாண்டி, சக்திவேல், கனகவள்ளி, கருப்பசாமி, கருப்பையா, கார்த்தி செல்வன், கரைமுருகன், முனீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement