பாலமலை பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகள் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் வாக்குறுதி

பெ.நா.பாளையம்: 'பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையில் வசிக்கும் பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்' என, கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் பிரசாரம் செய்தார்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழங்குடியினர் வாழும் பெரும்பதி, பெருக்கைபதி, பெருக்கைப்பதிபுதூர், மாங்குழி, குஞ்சூர்பதி உள்ளிட்ட மலை கிராமங்களில் அருண்குமார் பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், ''பாலமலை மலையில் குஞ்சூர்பதியில் இருந்து மாங்குழிக்கு தரமான சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள உண்டு, உறைவிட பள்ளி மேம்படுத்தப்படும். பாலமலை பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க, கூடுதல் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, பழங்குடியின மக்களுக்கு, 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழங்குடியினருக்காக தரமான மருத்துவமனை அமைக்கப்படும். மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி அவர்களின் வாழ்வு மேம்பட அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் கடன் பெற வழிவகை செய்வதுடன், அதில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்,'' என்றார்.

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைசாமி, கோவனூர் ரஞ்சித் குமார், நாயக்கன்பாளையம் சசி, குணசேகரன், மகேந்திரன், குருதாச்சலம், நாகராஜ் மற்றும் பா.ஜ.,வை சேர்ந்த சவுந்தரராஜன் கோபி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement