கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் தாராபுரம் தி.மு.க. வேட்பாளர் உறுதி

திருப்பூர்: தாராபுரம், குண்டடம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க. வேட்பாளர் இந்திராணி கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இந்திராணி தீவிரமாக களப்பணியாற்றி, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். நகரம், கிராமம் என, வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்கின்றார். அதன் ஒரு பகுதியாக நேற்று, வேட்பாளர் இந்திராணி குண்டடம் மேற்கு ஒன்றியதுக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காலையில் காதப்புள்ளபட்டியில் பிரசாரம் ஆரம்பித்து, சென்னிமலைபாளையம், குப்பண்ணன் கோவில், எஸ்.காஞ்சிபுரம், பொன்னாளிபாளையம், குப்புச்சிபாளையம், நாரணாபுரம், எரகாம்பட்டி, மானுார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் செய்தார். கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளருக்கு மக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர். முதியவர்களிடம் வாழ்த்து பெற்றார். அமைச்சர் கயல்விழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

மேலும், கடந்த, ஐந்து ஆண்டுகளாக தி.மு.க., அரசு திட்டங்கள், தொகுதிக்குள் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்தும், அடுத்து, ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார். ''மக்கள் தங்கள் பகுதிகளின் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெரியப்படுத்தலாம். என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்'' என்று வேட்பாளர் இந்திராணி பேசினார்.

Advertisement