கால்நடைகளால் நெல் பயிர்கள் சேதம்: பாகூர் விவசாயிகள் கவலை

பாகூர்: பாகூர் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகள், நெல் வயலில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

புதுச்சேரியின் நெல் களஞ்சியமான பாகூர் பகுதியில் ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நெல் பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்கள் வெளிவரும் நிலையில் உள்ளது. இந்நிலையில், பாகூர், பின்னாட்சிக்குப்பம், காட்டுக்குப்பம் புறவழிச்சாலையையொட்டி, பகுதியில் சுற்றித்திரியும் 100க்கும் மேற்பட்ட மாடுகள், வயல் வெளியில் புகுந்து நெல் பயிர்களை நாசம் செய்வதால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரித்துள்ளனர்.

இதனால், விவசாயிகள் பகல் முழுவதும் வயல்வெளியில் காவல் இருந்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும், கட்டுப்பாடின்றி சுற்றுத்திரியும் கால்நடைகள் கூட்டமாக வயல்வெளியில் புகுந்து பயிர்களை மேய்ந்தும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன. ஏற்கனவே, மயில்கள், காட்டுப் பன்றிகள், எலிகளால் பயிர் சேதங்கள் ஏற்பட்டு இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது கால்நடைகளால் பயிர்கள் சேதமாகி இழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.

கால்நடைகளால் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும், கட்டுப்பாடின்றி சுற்றுத்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, பொது ஏலம் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுருத்தி வருகின்றனர்.

Advertisement