பணம் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கும் தி.மு.க.,: அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: பணத்தை கொடுத்தால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு விடலாம் என தி.மு.க., முயற்சிப்பதாக அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டினார்.

குதிரைச்சந்தல், நயினார்பாளையம், சிறுவத்துார், தென்கீரனுார், நீலமங்கலம், விருகாவூர், கூத்தக்குடி பகுதிகளில் அவர் பேசுகையில், 'சட்டசபை தேர்தலையொட்டி மக்களை ஏமாற்றும் நோக்கில் மகளிர் வங்கி கணக்கில் 5000 ரூபாயை முதல்வர் ஸ்டாலின் செலுத்தினார். இந்த பணம் போடுவதற்கு முன் மருத்துவ செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு கொடுக்க பணம் இல்லை என்றார்.

தற்போது மகளிர் உரிமைத் தொகையில் 3,000 ரூபாய் முன்பணத்துடன், கோடைகால நிதியாக 2,000 ரூபாய் சேர்த்து வழங்கியுள்ளார். கடந்தாண்டு மே மாதம் கோடை வெயில் ஏன் ஒரு ரூபாய் கூட போடவில்லை. தற்போது தேர்தல் நேரம் என்பதால் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். மக்கள் சிந்தித்து இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.

செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பா.ம.க., மாவட்ட செயலாளர் தமிழரசன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement