'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்

12

சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து யார் பேசினாலும், அவர்களை கிண்டலடிக்கும் வகையில் சபாநாயகர் அப்பாவு பேசுவதுடன், அமைச்சர்கள் கூற வேண்டிய பதிலையும் அவரே கூறி விடுவார். மேலும், ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஏதேனும் குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவிப்பார்.

அவர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, அவரை இளைஞர்கள் கலாய்த்து அனுப்பி உள்ளனர். ராதாபுரம் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் அப்பாவு, தனது தொகுதிக்குட்பட்ட ஆவரைகுளம் மற்றும் அம்பலவாணபுரத்தில் ஓட்டு சேகரிக்க சென்றார்.

அங்கு மக்களிடம் பேசும்போது, கடந்த தேர்தலில், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறினார். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: நான் ஓட்டு கேட்கிறேன். தாய்மார்கள் கேட்க தயாராக உள்ளனர். சிலர் குழப்பம் விளைவிக்க நினைக்கிறாங்க. அவர்கள் யார் என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.

குழப்பவாதிகள் அமைதியாக இருங்கள். நீங்கள் ஓட்டு போட்டால் போடுங்கள். போடாவிட்டால் போங்கள். அது உங்கள் விருப்பம்.

ஆனால், நான் ஓட்டு கேட்கக் கூடாது, பிரசாரம் செய்யக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. தாய்மார்கள் தாமிரபரணி தண்ணீர் கேட்டனர். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு, ஓட்டு கேட்க வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்து அப்பாவு, தனது பேச்சை கேட்க, தாய்மார்கள் தயாராக இருப்பதாக கூறியதும், 'அவர்கள் 200 ரூபாய் வாங்கி உள்ளனர்' என சில இளைஞர்கள் கூற, மற்றொருவர், 'இதை அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' எனக் கூறியவுடன், அங்கு சிரிப்பலை அதிகரித்தது. இதனால் கடுப் பாகி போன அப்பாவு அங்கிருந்து நகர்ந்தார்.

Advertisement