மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்

அம்பத்துார் தொகுதியில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சிலிண்டர் சின்னத்தில், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க வேட்பாளர் போட்டியிடுவது, பா.ம.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமதாஸ், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பை துவக்கி, சசிகலாவின் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். அவர் நிறுத்திய வேட்பாளர்களுக்கு, சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்துார் தொகுதியில் போட்டியிடும், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகத்திற்கும் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர், சிலிண்டர் சின்னத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.,விற்கு, அம்பத்துார் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அக்கட்சி சார்பில் அம்பத்துார் நகராட்சி முன்னாள் தலைவர் கே.என்.சேகர் போட்டியிடுகிறார். அம்பத்துார் தொகுதியில், வன்னியர் சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்களில் ராமதாஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க வேட்பாளருக்கு, ராமதாஸ் ஆதரவாளர்கள் ஓட்டு போட்டு விடுவரோ என, பா.ம.க.,வினரிடம் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement