ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை

5

மதுரை செல்லுாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன், 41, டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். உள்ளூரில் நிலவும் சாலை சேதம், குடிநீர் பிரச்னை என பல பிரச்னைகள் குறித்தும் போராடி வருபவர். கடந்த 2021 சட்டசபை, 2022 மாநகராட்சி, 2024 லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது, மதுரை வடக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

சமூக ஆர்வலராக இருப்பதால், இந்த முறை தனது பிரசாரத்தை வித்தியாசமாக செய்ய நினைத்துள்ளார். அதனால், தத்தனேரி சுடுகாட்டில் உள்ள மயான காளி முன்பு, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்கவும், தேர்தலில் தோல்வி அடையவும் சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சங்கரபாண்டியன் கூறியதாவது:

ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர். நான் பலமுறை மனு கொடுத்தும் தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறேன்.

ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுத்து, இந்த தேர்தலோடு அவர்களின் சகாப்தம் முடிய வேண்டும் என மயான காளியிடம் வேண்டியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ரத்த வாந்தி சிறப்பு பூஜை குறித்து தகவல் அறிந்த போலீசார், சங்கரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய் வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement