மக்களை வஞ்சித்த தி.மு.க. அரசு :பா.ஜ. வேட்பாளர் குற்றச்சாட்டு

திருப்பூர்: ''தி.மு.க. அரசு கடந்த, ஐந்து ஆண்டாக மக்களை வஞ்சித்து விட்டது. அவர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்,'' என, கூறி, திருப்பூர் தெற்கு பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் கூட்டணி கட்சியினருடன் சென்ற தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று காலை, கரட்டங்காடு பகுதியில் தனது அனல் பறக்கும் பிரசாரத்தை துவக்கினார். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்களை துாவியும் மக்கள் வரவேற்றனர். ஒவ்வொரு வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

என்.பி. லே-அவுட், புதுக்காடு, பொன்னம்மாள் லே - அவுட், காஞ்சி காமாட்சி நகர், அண்ணா நகர், புஷ்பா நகர், பெரியதோட்டம், சின்ன தோட்டம், கே.எம்.பி., காலனி உள்ளிட்ட, 50வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜம்மனை வீதி, எல்.ஐ.சி. ரோடு, காமாட்சி அம்மன் கோவில் வீதி, காமராஜர் ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட், அரிசி கடை வீதி, பெருமாள் கோவில் வீதி, பூ மார்க்கெட் கார்னர் உள்ளிட்ட பகுதியில், 44வது வார்டு பகுதிகளில் மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

முன்னதாக, பெரியதோட்டம் உள்ளிட்ட பகுதியில் இஸ்லாமிய மக்களை சந்தித்து வேட்பாளர் தாமரை சின்னத்துக்கு ஓட்டளிக்க பிரசாரம் செய்தார். அப்போது, பெண் ஒருவர், தாமரை, இரட்டை இலையை வரைந்து, வேட்பாளரிடம் வழங்கினார்.

பிரசாரத்தில் வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் பேசியதாவது:

கடந்த, ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகரித்து விட்ட போதை கலாசாரம், பாலியல் கொடுமை, கொலைகள் என நடக்காத நாளே இல்லை. அவ்வகையில், மக்களின் அமைதியை கெடுத்த தி.மு.க. அரசு வஞ்சித்துள்ளது. மத்திய அரசு ஏராளமான திட்டங்களை ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ளது. அதில், வழக்கம் போல் தனது ஸ்டிக்கரை ஒட்டி தி.மு.க.வினர் விளம்பரம் செய்து கொண்டனர். இந்த முறை அவர்களின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம். தேசிய ஜனநாயக கூட்டணி, மக்களுக்கான திட்டங்களை கொண்டு வரும். திருப்பூருக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களைக் கேட்டு பெற்று, செய்து கொடுப்பேன். பிரசாரத்தில் மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பொதுமக்களின் முகத்தில் ஒரு தெளிவு தெரிகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

--

திருப்பூர் மாநகராட்சி, 50வது வார்டு பெரிய தோட்டம் பகுதியில், பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் பிரசாரம் செய்தார்.

Advertisement