போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!

96

நமது சிறப்பு நிருபர்



‛‛உங்களுக்காக பல வலிகளை தாங்கி வந்திருக்கிறேன்.....''

‛‛உங்களுக்காகவே உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.....''

‛‛ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருப்பான்''...

‛‛அண்ணனாக, தம்பியாக, மகனாக நான் இருப்பேன்....''


இப்படியெல்லாம் அரசியல் மேடைகளில் நீட்டி முழக்கி வீர வசனம் பேசும் விஜய், தன்னை நம்பி. தனது பின்னால் வரும் இளைஞர்களை நல்வழிப்படுத்த இதுவரை ஏதாவது செய்திருக்கிறாரா என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. விஜய் போகும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் கூடுகிறார்கள்.


அவரைப் பார்த்து வெறித்தனமாக கூச்சலிடுகிறார்கள். பலர் உயிரைப் பணயம் வைத்து பைக்குகளில் விஜய் வாகனத்தை துரத்துகிறார்கள். ‛‛விஜய் தான் எங்களுக்கு எல்லாமே. விஜய்க்கு தான் ஓட்டுப் போடுவோம். விஜய் மட்டுமே மாற்றத்தைத் தருவார் என்றெல்லாம் பரபரப்பாக பேட்டி தருகிறார்கள். பல வீடுகளில் பெற்றோர்களும் தங்கள் பி்ள்ளைகளுக்காக விஜயை கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.


ஆனால், உண்மையில் இந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த விஜய் இதுவரை என்ன செய்துள்ளார் என்று பல பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே தமிழக இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, போதை மருந்து நடமாட்டம் அதிகரித்துள்ளது என்ற பெரும் குற்றச்சாட்டு இருக்கிறது.


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதற்கு இந்த போதை பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.நடிகர் ரஜினிகாந்த் கூட, சமீப காலமாக சில இடங்களில் பேசும்போது, ‛‛இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் மனமும் உடலும் கெட்டு விடும்'' என்று கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கிறார்.



நடிகர் அஜித் கூட, ‛‛படம் பார்க்கும்போது நடிகர்களை ரசியுங்கள். அதோடு விட்டுவிட்டு, குடும்பத்தை கவனியுங்கள்'' என்று பல முறை பேசியுள்ளார். ஆனால் இந்த விஜய் என்ன செய்கிறார். தனது படங்களில் புகை பிடிக்கிறார், போதையை நன்கு ஏற்றி படுக்கையில் விழுந்து கிடக்கிறார். கேரக்டருக்காக அப்படி நடித்தாலும், அதை தனது ரசிகர்களும் பின்பற்றுவார்களே என அவர் யோசிப்பதில்லை.


சரி, படத்திற்காக வேறு வழியில்லாமல் அப்படி நடிப்பதாகவே வைத்துக்கொள்வோம். அதன் பிறகாவது, ‛‛என் நெஞ்சில் குடிகொண்டு இருக்கும் ரசிகர்களே. நான் செய்வது எல்லாமே சினிமாவுக்காகத் தான். அதை நிஜ வாழ்க்கையில் செய்யாதீர்கள். போதை பக்கமே போகாதீர்கள். குடும்பம் சீரழிந்துவிடும். உங்கள் குடும்பத்தை பாருங்கள். போதை உங்களை அழித்து விடும்'' என்று என்றைக்காவது பேசி உள்ளாரா.


பணம் சம்பாதிப்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று தானே நினைக்கிறார். தனது ரசிகர்களும் போதையின் பிடியில் சிக்கி இருந்தால் தான் மூளைக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். தனது படங்களை தேடித்தேடி பார்ப்பார்கள். நாமும் நிறைய சம்பாதிக்க முடியும் என்றுதானே நினைக்கிறார்.


உண்மையில் மக்கள் நலனுக்காக அரசியலுக்கு வருபவராக இருந்தால், தனது லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு அவர் அறிவுரை சொல்லி இருக்க வேண்டும் அல்லவா. ஏன் அவர் அதை செய்யவில்லை. அப்படி என்றால் நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்கிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன.
என்ன செய்யப் போகிறார் விஜய்?

Advertisement