'தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்தால் காலை உணவு திட்டம் தொடரும்'

போத்தனூர்: ''பள்ளி குழந்தைகள் விரும்பும் காலை உணவு திட்டம் தொடர உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்,'' என, கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயன் பேசினார்.

கிணத்துகடவு தொகுதி தி.மு.க. வேட்பாளார் சபரி கார்த்திகேயன் நேற்று மயிலேறிபாளையம், ஏலூர், மாம்பள்ளி, அரிசிபாளையம், போடிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார். அனைத்து பகுதிகளிலும் மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

சபரிகார்த்திகேயன் பேசியதாவது:

அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் உங்களில் ஒருவனான என்னை வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் ஓட்டை கேட்பதற்கான தகுதியை பெற்றுள்ளோம். கடந்த ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் உங்களை வந்தடைந்துள்ளன.

நமது கழக அரசின் திட்டங்களால் பயனடையாத தனி நபர்களே கிடையாது. ஒவ்வொரு திட்டங்களும் மக்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மேலும் அதை விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவர் நமது முதல்வர் ஸ்டாலின்.

கொரோனா கால நிவாரண தொகை ரூ.4,000 ஆட்சிக்கு வந்தவுடன் தரப்பட்டது. மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், பள்ளி குழந்தைகள் மிகவும் விரும்பும் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் நமது முதல்வர் ஸ்டாலின். இத்திட்டங்கள் தொடர்ந்திட தி.மு.க. வை ஆதரியுங்கள்.

இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன், மகளிர் உரிமை தொகை ரூ. 2,000 வழங்கப்படும். பெண்களின் முன்னேற்றமே ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக இத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக அ.தி.மு.க.வினர் உள்ளனர். ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை. இந்நிலை மாற உங்கள் பகுதி முன்னேற, உதயசூரியனை ஆதரித்து, என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவ்வை நகரில், சமுதாய கூடம், சொகுசு பஸ்சிற்கு மாற்றாக விடியல் பயண பஸ், ஆரம்ப சுகாதார நிலையம், குடிநீர் வினியோகம் இடைவெளி குறைப்பு உள்ளிட்டவை கோரி மனு கொடுத்தனர். அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என, சபரி கார்த்திகேயன் உறுதியளித்தார்.

காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் வந்தனர்.

Advertisement