செய்தி எதிரொலி சவுடு மண் கடத்தினால் 'குண்டாஸ்' கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை
திருவள்ளூர்: நம் நாளிதழில் செய்தி எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கனிமவளங்களை கடத்தி செல்வோர் மீது, 'குண்டர் தடுப்பு சட்டத்தின்' கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சவுடு மண் குவாரிகள், தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், வீடுகள், வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு, சவுடு மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி, ஆந்திர மாநிலத்தில் செயல்படும் சவுடு மண் குவாரிகளில் இருந்து, போலி ரீசீது மூலம், தமிழகத்திற்கு அதிகளவில் லாரிகளில் மண் கடத்தி வரப்படுகிறது. ஊத்துக்கோட்டை, பென்னலுார்பேட்டை, திருத்தணி, எளாவூர், சத்தியவேடு உள்ளிட்ட தமிழக - ஆந்திர மாநில எல்லை வழியாக, 100க்கும் மேற்பட்ட லாரிகளில், சவுடு மண் கடத்தல் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட கனிமவள துறையினர், அவ்வப்போது சோதனை நடத்தி, கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்தாலும், அதிகாரிகள் சென்றதும் மீண்டும் கடத்தல் தொடர்கிறது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் சவுடு மண் கடத்தி வருவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில், அரசின் அனுமதியின்றி கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டியெடுத்து, வாகனங்களில் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், ஊத்துக்கோட்டை வட்டத்தில் சோதனை நடத்தியதில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல், கள்ளத்தனமாக கிராவல் மற்றும் சாதாரண மண் ஏற்றிச் சென்ற, மூன்று டாரஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
மேலும், உரிய அனுமதியின்றி, கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க வருவாய், கனிமவளம் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்