அணுகு சாலை பணி முழுமையாக நிறைவேற்றப்படும்; செங்கல்பட்டு அ.தி.மு.க., வேட்பாளர் கஜேந்திரன் உறுதி
செங்கல்பட்டு:தமிழகத்தின் 17வது சட்டசபை தேர்தல், ஏப்., 23ல் நடக்கிறது. இதில், செங்கல்பட்டு தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், கஜேந்திரன் போட்டியிடுகிறார்.
பிரசாரத்தின்போது, தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் புள்ளி விபரங்களோடு பேசும் கஜேந்திரன், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்தும் பேசி வருவது, பொது மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
கஜேந்திரன் கூறியதாவது:
செங்கல்பட்டு முதல் வண்டலுார் வரையிலான 29 கி.மீ., நீளமுள்ள ஜி.எஸ்.டி., சாலையில், நுழைதல், வெளியேறுதல் என்ற வகையில் நாளொன்றுக்கு 3 லட்சம் வாகனங்கள் பயணிப்பதாகவும், விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 5 லட்சம் வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எட்டு வழித்தடமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், பல இடங்களில், ஆறு வழி சாலையாகவே உள்ளது. தவிர, இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க, அணுகு சாலைகள் முறையாக அமைக்கப்படவில்லை.
குறிப்பாக, மகேந்திரா சிட்டி முதல் மல்ரோசாபுரம் வரை 3 கி.மீ., துாரத்திற்கும், தைலாபுரம் முதல் அய்யஞ்சேரி வரை 6 கி.மீ., துாரத்திற்கும் அணுகு சாலை அமைக்கப்படவில்லை.
இதனால், பல இடங்களில், எதிர் திசையில் வாகனங்கள் பயணித்து, விபத்துகள் ஏற்படுகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து பயணிப்பதிலும், சிக்கல் நிலவுகிறது.
இந்த சாலையின் இரு பக்கமும் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. தவிர, நந்திவரம் - கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய நகராட்சிகளும் உள்ளன. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையமும் இதே வழித்தடத்தில் உள்ளது.
அதிக போக்குவரத்து உள்ள இந்த வழித்தடத்தில், அணுகுசாலை பணிகள் முழுமையடையாததால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிப்பது கேள்விக்குறியாக உள்ளது.
அரசு பேருந்துகள் நின்று செல்ல, வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், இரு பக்கமும் தலா 23 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இதில், 8 நிறுத்தங்களில் மட்டுமே பயணியர் நிழற்குடை உள்ளது. மீதமுள்ள 15 நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை. இதனால், வெயிலும், மழையும், பயணியரை கடும் அவஸ்தைக்குள்ளாக்கி வருகிறது.
நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்கும் பட்சத்தில் செங்கல்பட்டு --வண்டலுார் இடையே, விடுபட்டுள்ள அணுகு சாலைகள் அனைத்தும், தரமான முறையில் அமைக்கப்படும்.
அதுபோல், வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான சாலை ஆறு வழித்தடமாக தரம் உயர்த்தப்படும். அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-----------