காஸ் தட்டுப்பாடால் விறகு விலை இரண்டு மடங்கு உயர்வு சவுக்கு சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி

-நமது நிருபர்- காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, சவுக்கு உள்ளிட்ட விறகுகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், சவுக்கு சாகுபடி செய்த விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில், 1.20 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.

இதில், நீர் பாசனம் வசதி இருக்கும் விவசாயிகள் நெல், காய்கறி உள்ளிட்ட பல வித விளைப்பொருட்களை சாகுபடி செய்து, மகசூல் ஈட்டி வருகின்றனர்.

நீர் பாசனம் இல்லாத மானாவாரி விளை நிலங்களில் விவசாயிகள், சவுக்கு, தைலம் உள்ளிட்ட மரக்கன்றுகளை சாகுபடி செய்து, கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் விளை நிலங்களை தரிசாக விட்டு விடுகின்றனர்.

அதில் தானாக வளரும் சீமைக்கருவேல மரங்களின் மூலமாக கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர்.

ஈரான் - இஸ்ரேல் போர் நடந்துக்கொண்டிருப்பதான் காரணமாக, கச்சா எண்ணெயின் வரத்து குறைந்திருப்பதால், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள், வாகனத்திற்கு நிரப்பப்படும் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், காஞ்சிபுரம் நகரில், பெரும்பாலான தனியார் உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது. இட வசதி இருக்கும் தனியார் உணவகங்கள் விறகடுப்பு பயன்படுத்தி உணவகத்தை நடத்தி வருகின்றனர்.

விறகு அடுப்பிற்கு பயன்படுத்தப்படும் சீமைக்கருவேலம், சவுக்கு உள்ளிட்ட பல்வேறு விதமான விறகுகளின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், 1,000 கிலோ சீமைக்கருவேல மரங்களின் விறகு, 3,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. அதே, 1,000 கிலோ சவுக்கு மற்றும் தைல மரங்களின் விலை, 4,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களாக, விறகுகளின் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது.

குறிப்பாக, 1,000 கிலோ சீமைக்கருவேல மரங்களின் விலை, 6,000 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. அதிலும், 1000 கிலோ சவுக்கு, தைலம் உள்ளிட்ட மரங்களின் விலை 8,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.

இதனால், ஒரு சில விவசாயிகள் சவுக்கு பயிரிடவில்லை என, புலம்பி வருகின்றனர். சவுக்கு பயிரிட்டுள்ள வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து, வில்லிவலம் கிராமத்தைச்சேர்ந்த சவுக்கு சாகுபடி செய்த ராஜா கூறியதாவது:

எங்கள் பகுதி விளை நிலம், பாலாறு ஒட்டிய பகுதியாகும். இந்த ஆற்றங்கரை ஒட்டி இருக்கும் களி மண் நிலத்தில் காய்கறி சாகுபடி செய்கிறோம்.

ஆறு ஒட்டிய நிலங்களில், சவுக்கு, தைலம் ஆகிய மரங்களை சாகுபடி செய்து வருகிறோம். இந்த மரக்கன்று சாகுபடிக்கு, துவக்கத்தில் தண்ணீர் ஊற்றுவது தான் பிரதானமாக இருக்கும்.

வளர்ந்து விட்டால், அவ்வப்போது பெய்து வரும் மழையால், சவுக்கு, தைலம் ஆகிய மரங்களை அறுவடை செய்யலாம். கடந்த ஆண்டு சவுக்கு மரம் அறுவடை செய்யும் போது 4,000 ரூபாய்க்கு கூட எடுக்க ஆட்கள் இல்லை.

தற்போது, காஸ் சிலிண்டர் தட்டுப்பாட் டால் விறகுகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மர வியாபாரிகளும், விவசாயிகளிடம் தேடி வந்து முன் பணம் கொடுத்து, மரத்தை வெட்டி செல்கின்றனர். இது, மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement