விமர்சித்த அமெரிக்க அதிபருக்கு பதிலடி கொடுத்தார் போப் லியோ

5

வாஷிங்டன்: ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரை விமர்சித்து கருத்து தெரிவித்த போப் லியோ மீது, கடுமையாக விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இதற்கு போப் மீண்டும் பதில் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வருகின்றன. போரை நிறுத்தி அமைதி ஏற்படுத்த போப் லியோ வலியுறுத்தியதுடன், ஈரானை அழிப்போம் என்ற டிரம்ப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

போப் லியோவின் விமர்சனங்களால் கொதித்த டிரம்ப், சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது: ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை சரி என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு தேவையில்லை. வெனிசுலாவை அமெரிக்கா தாக்கியது பயங்கரமானது என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு தேவையில்லை.

லியோ ஒரு போப்பாக தன் செயல்பாடுகளை சரியாக செய்ய வேண்டும்; பொது அறிவை பயன் படுத்த வேண்டும். தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு சிறந்த போப்பாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நான் வெள்ளை மாளிகையில் இல்லாமல் இருந்திருந்தால், வாடிகனில் போப் இருந்திருக்க மாட்டார். அவர் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராவதற்கு நானே காரணம்.

அமெரிக்காவின் உதவியை பெறுவதற்காகவே, அமெரிக்காவில் பிறந்த ஒருவரை முதல்முறையாக கடந்தாண்டு போப்பாக தேர்ந்தெடுத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து போப் லியோ கூறியுள்ளதாவது: சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக வாடிகனின் வேண்டுகோள்கள் நற்செய்தியில் வேரூன்றியவை. டிரம்ப் நிர்வாகத்தை கண்டு நான் அஞ்சவில்லை; அவருடன் விவாதத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. போருக்கு எதிராக தொடர்ந்து நான் சத்தமாக குரல் கொடுப்பேன்.

அமைதியை மேம்படுத்தவும், அமைதி பேச்சை ஊக்குவிக்கவும், பிரச்னைகளுக்கு நியாயமான தீர்வுகளை காணவும், உலக நாடுகளுக்கு இடையேயான பலதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பணியில் கவனம் செலுத்துவேன்.

இன்று உலகில் ஏராளமான மக்கள் துன்பப்படுகின்றனர்; ஏராளமான அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர். இதை தடுக்க, வேறு சிறந்த வழிகள் இருக்கிறது என யாராவது ஒருவர் சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய போப்பிற்கு முன் இருந்த போப் பிரான்சிஸ் உடனும், டிரம்ப் இணக்கமற்ற உறவையே கொண்டிருந்தார்.

கடந்த 2016ல் போப் பிரான்சிஸை அவமானத்துக்குரியவர் என டிரம்ப் அழைத்திருந்தார். டிரம்ப் முதன்முதலில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவரது குடியேற்ற கொள்கைகளை பிரான்சிஸ் விமர்சித்திருந்தார்; மேலும், டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் கத்தோலிக்கர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் கடந்த அதிபர் தேர்தலில் டிரம்புக்கே ஓட்டளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement