500 மெகாவாட் குந்தா நீரேற்று மின் திட்டம்: பணிகளை முடிக்க காலக்கெடு நீட்டிப்பு
சென்னை: நீலகிரி மாவட்டத்தில், 500 மெகாவாட் திறனில், குந்தா நீரேற்று மின் நிலைய கட்டுமான பணிகளை முடிக்காமல், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் தாமதம் செய்கின்றன. கடந்த மாதம் பணிகளை முடிக்க திட்டமிட்ட நிலையில், இந்தாண்டு அக்., வரை காலக்கெடுவை, மின் வாரியம் நீட்டித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா வட்டம், மலைப் பகுதிகளில், மின் வாரியத்திற்கு 833 மெகா வாட் திறனில், 12 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அந்த வட்டத்தில் தலா, 125 மெகா வாட் திறனில், நான்கு அலகுகள் உடைய, குந்தா நீரேற்று மின் நிலையம் அமைக்கும் பணியை, மின் வாரியம், 2018 பிப்., 15ல் துவக்கியது. திட்ட செலவு, 3,523 கோடி ரூபாய்.
நீர் மின் நிலையத்தில், ஒரு முறை மின் உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீரை, மீண்டும் பயன்படுத்த முடியாது. அதேசமயம், நீரேற்று மின் நிலையத்தில், மின் உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீர் கீழ் அணையில் இருந்து, மீண்டும் மேல் அணைக்கு எடுத்து செல்லப்பட்டு, தேவைக்கு ஏற்ப மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும்.
குந்தா நீரேற்று மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள், இரு பிரிவுகளா க மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றை, இரு தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் செய்கின்றன. கடந்த, 2021 - 22ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை.
மிகவும் மந்தகதியில் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, 2025 - 26க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இன்னும் பணிகள் முடிவடையவில்லை.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குந்தா நீரேற்று மின் நிலைய பணிகள், திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாததால், செலவு அதிகரித்து வருகிறது. பணிகளை முடிக்காத ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செய்யாமல், அவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்காத நிலையில், வரும் அக்., வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பணிகளை முடிக்காவிட்டால், ஒப்பந்த நிறுவனங்களிடம், அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை