கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுபள்ளி ஊராட்சியில் அ.தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு



இடைப்பாடி, இடைப்பாடி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிடுகிறார். கொங்கணாபுரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மணி, நேற்று கொங்கணாபுரம் ஒன்றியம், கச்சுபள்ளி ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று, துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர பிரச்சாரம் செய்தார். நங்கவள்ளி ஒன்றிய பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், பெட்டி கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகளில் அ.தி.மு.க.,விற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது, கொங்கணாபுரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மணி பேசியதாவது:
இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் முதல்வராக இருந்தபோது, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் சேர, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். இதன் மூலம் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள், 500க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவர்களாகி சாதனை படைத்து வருகின்றனர். மேலும், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
விவசாய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். குலவிளக்கு திட்டத்தில் குடும்ப அட்டை மூலம் மகளிருக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். பெண்கள் ஸ்கூட்டி வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் மினி கிளினிக் புதுப்பொலிவுடன் மீண்டும் தொடங்கப்படும். ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசியுடன் மாதந்தோறும் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மீண்டும் ஆட்சி அமைந்தவுடன், 100 ஏரி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். அதேபோல் தி.மு.க., ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு பேசினார்.
கொங்கணாபுரம் ஒன்றியம், கச்சுபள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி ஓட்டு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது கொங்கணாபுரம் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், கச்சுபள்ளி பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement