தேர்தலை புறக்கணிப்பதாக கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

தலைவாசல், தலைவாசல் அருகே, வீரகனுார் டவுன் பஞ்., 10வது வார்டு, அண்ணா நகரில், 350 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு, கழிப்பறை வசதி இல்லாததால், திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் கழிப்பறை கட்டப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் நேற்று, தங்களது வீடு, தெருக்களில் கறுப்புக்கொடி கட்டி, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரகனுார் போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 'தங்களது பகுதியில் கழிப்பிடம், அடிப்படை வசதிகள் குறித்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்' என்றனர். அதன்பின், போலீசார் அங்கிருந்து சென்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், தி.மு.க., வேட்பாளர் சின்னதுரை ஓட்டு கேட்டு வந்தபோது, இங்கு கறுப்பு கொடி கட்டிய தகவலறிந்து, ஊருக்குள் நுழையாமல் சென்று விட்டார். அதேபோல், அ.தி.மு.க., வேட்பாளர் நல்லதம்பி, கறுப்பு கொடி கட்டியுள்ளது குறித்து கேட்டார். ஆனால், அவர், இதற்கான தீர்வு குறித்து தெரிவிக்காமல் சென்றுவிட்டார். தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை, தேர்தல் புறக்கணிப்பில்
ஈடுபடுவோம்' என்றனர்.

Advertisement