பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் மே மாதம் அமலுக்கு வர வாய்ப்பு

புதுடில்லி: இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே கடந்த ஆண்டு ஜூலையில் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அடுத்த மாதம் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த 2025 ஜூலை 24ம் தேதி கையெழுத்தான, இந்த 'விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக' ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் 99 சதவீத ஏற்றுமதி பொருட்கள், பிரிட்டன் சந்தையில் சுங்கவரி இல்லாமல் அனுமதிக்கப்படும். இதற்கு பதிலாக, இந்தியாவில் சில பிரிட்டன் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்கவரி குறைக்கப்படும்.

தற்போது கிட்டத்தட்ட 5.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை 2030க்குள் இரட்டிப்பாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்திய சந்தையில் சாக்லேட், பிஸ்கட், அழகு சாதன பொருட்கள் போன்ற பல நுகர்வோர் பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஜவுளி, காலணி, நகை, விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் போன்ற பொருட்களை பிரிட்டனுக்கு அனுப்ப வாய்ப்பு கிடைக்கும்.

இது தவிர, இரு நாடுகளும் டி.சி.சி., எனப்படும் 'இரட்டை சமூகப் பாதுகாப்பு கட்டண ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன. இதன் வாயிலாக, இரு நாடுகளிலும் தற்காலிகமாக பணிபுரியும் மாற்று நாட்டு தொழிலாளர்கள், இருமுறை சமூகப் பாதுகாப்பு கட்டணங்கள் செலுத்துவது தவிர்க்கப்படும்.

Advertisement