18 வாய்க்கால்கள் பராமரிப்பு பற்றி பிரசாரத்தில் பேசாத வேட்பாளர்கள் கம்பம் வட்டார விவசாயிகள் புலம்பல்

கம்பம்:20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ள 18 வாய்க்கால்களை பற்றி வேட்பாளர்கள் பேச மறுப்பது ஏன் என கம்பம் வட்டார நெல் சாகுபடி விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14,707 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்டுகிறது. முல்லைப் பெரியாறு பாசனத்தில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. அணை வலுவிழந்திருப்பதாக கூறி, கேரள அரசு பல்வேறு இடையூறுகளை செய்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு, அணை வலுவாக உள்ளதாக தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தது. இருந்த போதும் இன்னமும் பொய்ப் பிரசாரத்தை கேரள அரசியல்வாதிகளும், கேரள அரசும் செய்து வருகிறது.

இந் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க., த. தவ.க.. நா.த.க. உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் முல்லைப் பெரியாறு அணை பற்றி பேசுகின்றனர்.

இது தொடர்பாக கம்பம் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'பெரியாறு அணையை பற்றி பேசும் வேட்பாளர்கள், நெல் சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் அவலங்களை தீர்க்க என்ன தீர்வு என சொல்ல மறுக்கின்றனர். கூடலூரில் ஆரம்பித்து கம்பம், புதுப்பட்டி உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி வரை உள்ள 17 வாய்க்கால்கள், அதில் உள்ள நூற்றுக்கணக்கான மடைகள் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் தூர்ந்து போய் உள்ளன. அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீர் முறையாக விவசாயிகளால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு போகத்திலும் அறுவடை சமயத்தில் அரசின் நேரடி கொள் முதல் நிலையம் திறக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிகிறனர். அதைப் பற்றி பேச மறுக்கின்றனர் என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

Advertisement