ஆபத்தான இடத்தில் அரசு பள்ளி மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம்

பவுஞ்சூர்: பாலுார் கிராமத்தில், பழைய பள்ளி கட்டடம் மற்றும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடியும் நிலையில் இருப்பதாக பகுதி மக்கள் அச்சப் படுகின்றனர்.

பவுஞ்சூர் அருகே பச்சப்பாக்கம் ஊராட்சிக்கு உட் பட்ட, பாலுார் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.

இப்பள்ளிக்கு அருகிலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 15 மாணவர்களும், அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, பழைய தொடக்கப்பள்ளி கட்டடம் உள்ளது. அதே இடத்தில் சேதமடைந்த நிலையில், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் இருப்பதால், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் பயின்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பள்ளியை சுற்றி இடியும் நிலையில் உள்ள பழைய பள்ளிக் கட்டடம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சுற்றுச்சுவர் இல்லாத குளம் உள்ளது. இதனால், மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

கடந்தாண்டு 20 மாணவர்கள் படித்து வந்த நிலையில், இந்தாண்டு 15க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். பள்ளிக்கு அருகில் குளம் இருப்பதால் மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, இடியும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற, ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து சமீபத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement