 செங்கையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு...  கொஞ்சமும் அக்கறை காட்டாத மாவட்ட நிர்வாகம்

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், இதில் கொஞ்சம் கூட கவனம் செலுத்தாமல் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் எளிதாக பயன்படுத்தி வரும் மெல்லிய பிளாஸ்டிக் கவர்கள், மக்கும் தன்மை அற்றவை என்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. குப்பையோடு குப்பையாக குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன. உணவுப் பொருட்களோடு கலந்துவிடும் பிளாஸ்டிக் கழிவுகள், கால்நடைகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிப்பதாக மாறி வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், மெல்லிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு வெகுவாக குறைந்தது.

இயற்கை தயாரிப்பு கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, இயற்கை தயாரிப்புகள் விற்பனை அதிகரித்தது.

பல இடங்களில் பாக்கு மட்டைத் தட்டுகள், பேப்பர் கப்புகள், மந்தாரை இலை ஆகியவை பயன்படுத்தப்பட்டு பொதுமக்களின் மனதிலும் ஒருவித மாற்றத்தை உருவாக்கியது. தற்போது, இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி, மெல்லிய பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில், 50 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி உள்ளன.

இங்கு, ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலை, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. பல அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய மனைபிரிவுகளும் உள்ளன.

ஓ.எம்.ஆர்., சாலையில் நாவலுார் முதல் பையனூர் வரை ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இதில், குறிப்பாக சிறுசேரி - சிப்காட் பகுதியில் 30க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. ஆலத்துார் சிட்கோவில் 30க்கும் மேற்பட்ட மருந்து தொழிற்சாலைகள், குன்னப்பட்டு ஜப்பான் சிட்டில் தொழில்நகரத்தில், 15 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் மேற்கண்ட பகுதி தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.

தொழிலாளர்கள் அதேபோல், பிரபல தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகளும் உள்ளன. பிரபல மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன.

இதனால், வட மாநிலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள், மாணவர்கள் என பல தரப்பினர் திருப்போரூர் ஒன்றியத்தில் தங்கியுள்ளனர்.

மக்கள் அதிகரிப்பிற்கு ஏற்ப பல்வேறு வணிக கடைகளும் உருவாகி, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளன.

இவற்றை கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவாலு ம், தற்போது தேர்தல் பணி காரணமாகவும் அதிகாரிகளின் சோதனைகள், அபராதம் விதித்தல் போன்றவை குறைந்துவிட்டது.

இதனால், நாவலுார், படூர், கேளம்பாக்கம், திருப்போரூர், கோவளம், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டல், காய்கறி, பழம், இறைச்சி, மளிகை உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.

திருப்போரூர் மட்டுமின்றி, செங்கப்பட்டு மாவட்டம் முழுதும் இதே நிலைதான். மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாததால், ஆபத்தை விலை கொடுத்த வாங்கும் நிலை ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. பேரூராட்சி பகுதிகளிலாவது சில மாதங்களுக்கு முன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.

ஆனால், ஊராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தற்போது தேர்தில் நடப்பதால், அதிகாரி களும் தேர்தல் பணிகளில் உள்ளனர். எனவே, கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு சாதகமாக மாறிவிட்டது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement