மனதை ஒருங்கிணைத்தால் வாழ்வில் மகத்துவம் பெறலாம்: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா அறிவுரை

மதுரை: மனதை ஒருங்கிணைக்க தொடர்ந்து தியானம் செய்யும் போது, வாழ்வின் மகத்துவத்தை பெறலாம் என மதுரை தெய்வநெறி கழகத் தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்தா பேசினார்.

மதுரையில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில், தமிழ்ப்புத்தாண்டு விழா நடந்தது. உதவிப்பேராசிரியை முருகேஸ்வரி வரவேற்றார். நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

சுவாமி சிவானந்த சுந்தரானந்தா பேசியதாவது: நம் வாழ்வில் பிறரை மதித்து வாழ வேண்டும். 'சிவாய நம' என சிந்தித்து செயல்படுவோருக்கு வாழ்வில் அபாயம் ஏற்படாது.

எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், மனதை கட்டுப்படுத்தாவிட்டால் ஒரு பயனும் இல்லை. மனதை ஒருங்கிணைக்க முதலில் சிரமமே. தொடர்ந்து தியானம் செய்தால் வாழ்வின் மகத்துவத்தை அடையலாம். நமக்குள் நிம்மதி அடைய பிரார்த்தனையே வழி. கடவுள் உடலை தந்தது பிறருக்கு தொண்டு செய்வதற்கே. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதை நோக்கி, நம் பிரார்த்தனை அமைவது அவசியம் என்றார்.

மதுரை மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ரமேஷ், ஆன்மிக நன்னெறி வகுப்புகள் தலைவர் முருகேசன், மதுரைக் கல்லுாரி உதவிப்பேராசிரியர் கண்ணதாசன், ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் சோமசுந்தரம், செயலாளர் கண்ணன், அமைப்புச் செயலாளர் சங்கர நாராயணன் பங்கேற்றனர். என்.எம்.ஆர்.சுப்புராமன் மகளிர் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் அய்யம்மாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். உதவிப்பேராசிரியை ரூபினி நன்றி கூறினார்.

Advertisement