தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியனை ஆதரித்து நேற்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க., தான் எப்பொழுதும் வலுவான கூட்டணி வைக்கும். ஆனால், அ.தி.மு.க, 'மெகா' கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இருமுறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாண்டியன், தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை செய்துள்ளார். ராதா விளாகத்தில் தடுப்பணை கட்டி உப்பனாற்றை, நல்ல நீராக மாற்றியுள்ளார்.
தி.மு.க., புதிதாக சாலைகள் போடவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் தான் இன்றும் உள்ளன.
கடந்த, 5 ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில், வாய்க்கால்கள் வெட்டப்படாமல், பில் தொகை எடுக்கப்பட்டு வருகிறது. விவாயிகளே வாய்க்காலை வெட்டும் குடிமராமத்து திட்டம், பழனிசாமி கொண்டு வந்த அருமையான திட்டம்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், வாய்க்கால்கள் வெட்டப்படாமலே தி.மு.க., ஒன்றிய செயலாளர்களால் பில் போட்டு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். மாவட்டத்தை சேர்ந்த விவசாயத்துறை அமைச்சர் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆட்சிக்கு வந்தபின், விவசாயிகள் விளைவித்த அனைத்து ரக நெல்களையும் எடுத்து, அதை பாதுகாக்க குடோன் அமைக்கப்படும்; கல்வி கடன்கள் உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்படும்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் தாலிக்கு தங்கம் உள்ளிட்டவைகளை வழங்குவதாக, உறுதி அளித்துள்ளார்.
கடந்த, 5 ஆண்டுகளாக, 150 லட்சம் கோடி ரூபாய் ஊழல் முறைகேடு செய்தது தான் தி.மு.க.,வின் சாதனை. வேறு ஒன்றும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.