சாதனை முதல்வர் கரத்தை வலுப்படுத்துங்கள் :வடக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் தளபதி பிரசாரம்

மதுரை: 'தமிழகத்தின் சாதனை முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த மக்கள் மீண்டும் ஆதரவு அளிக்க வேண்டும்' என மதுரை வடக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் தளபதி பிரசாரம் செய்தார்.

வடக்கு தொகுதியில் கோ. புதுார், கற்பகம் நகர், மூன்றுமாவடி, கொடிக்குளம், கடச்சனேந்தல் பகுதிகளில் தளபதி பிரசாரம் செய்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூ துாவியும் வரவேற்பு அளித்தனர்.

தளபதி பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் மக்களுக்கு திட்டங்கள் வழங்கியது தி.மு.க., அரசு. மதுரை வடக்கு தொகுதிக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேலான திட்டங்கள் கிடைத்துள்ளன. 5 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய மகத்தான திட்டங்களில் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்து மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கும். விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் இத்திட்டம் வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் அனைவருக்கும் வழங்கப்படும். அதை கொண்டு நீங்கள் மிக்சி, பிரிஜ், வாஷிங்மெஷின் என எந்தப் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். நிர்வாகத் திறன் மிக்க முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைக்க, அவரது கரத்தை வலுப்படுத்த இத்தொகுதியில் தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, வட்டச் செயலாளர் மாதவன், மாவட்ட நிர்வாகிகள் மூவேந்திரன், ராகவன், அக்ரி கணேசன் பங்கேற்றனர்.

Advertisement