அனைவருக்கும் ரூ.1,000 அ.தி.மு.க., வேட்பாளர் 'பளிச்'

1

திருநெல்வேலி: வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து, அ.தி.மு.க., வேட்பாளர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் சட்டசபை தொகுதியில், ஒன்றிய மற்றும் கிளை செயலர்களுடன், அ.தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

வாக்காளர்களுக்கு தலா, 1,000 ரூபாய் வழங்க வேண்டும். தி.மு.க.,வினருக்கு மட்டும் பணம் கொடுக்க வேண்டாம். தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரசாரை அரவணைத்து செல்ல வேண்டும். காங்., ஆதரவாளர்கள் உள்ளிட்ட மற்ற அனைவருக்கும், பணம் வழங்க வேண்டும்.

யார் கேட்டாலும், 'இல்லை' என சொல்லாமல் கொடுக்க வேண்டும். அதற்கு, தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். ராதாபுரம் தொகுதியில், கடந்த காலங்களில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதை நினைவில் கொண்டு, எந்தவொரு ஓட்டையும் தவறவிடாமல் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓட்டுக்கு பணம் வழங்க, அ.தி.மு.க., வேட்பாளர் வெளிப்படையாக அறிவுறுத்தும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement