சென்னைக்கு இரண்டாவது வெற்றி * தொடரும் கொல்கட்டா சோகம்

1

சென்னை: சாம்சன், பிரவிஸ் ரன் குவிப்பு கைகொடுக்க, சென்னை அணி 32 ரன்னில் வெற்றி பெற்றது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில், சென்னை அணி, கொல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கொல்கட்டா அணி கேப்டன் ரகானே, பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கொல்கட்டா அணியில் நவ்தீப் சைனி நீக்கப்பட்டு, வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டார்.
'ஹாட்ரிக்' பவுண்டரி
சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் ஜோடி துவக்கம் தந்தது. வைபவ் அரோரா முதல் ஓவர் வீசினார். இதன் முதல் 3 பந்தில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் சாம்சன். மறுபக்கம் ருதுராஜ் (7) அவுட்டானார்.
ஆயுஷ் நம்பிக்கை
சாம்சன், ஆயுஷ் மாத்ரே இணைந்தனர். அனுகுல், கிரீன் பந்துகளில் பவுண்டரி அடித்தார் ஆயுஷ். கிரீன் வீசிய 4வது ஓவரின் கடைசி 3 பந்தில் 4, 6, 6 என விளாசி மிரட்டினார் ஆயுஷ். தொடர்ந்து விளாசலை நிறுத்தாத ஆயுஷ், வைபவ் ஓவரில் (6வது), முதல் 3 பந்தில் பவுண்டரி அடித்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் ஆயுஷ் (38 ரன், 17 பந்து) அவுட்டானார்.
ரன் வேகத்தை அதிகரிக்க முயன்ற சாம்சன், 32 பந்தில் 48 ரன் எடுத்த நிலையில், கார்த்திக் தியாகி பந்தில் போல்டானார்.
பிரவிஸ் 'வேகம்'
போட்டியின் 14வது ஓவரை வீசினார் வருண். 2வது பந்தில் சர்பராஸ் சிக்சர் அடிக்க, 4, 5 வது பந்தில் பிரவிஸ் பவுண்டரிகள் விளாசினார். வைபவ் வீசிய 16வது ஓவரில் சர்பராஸ், பிரவிஸ் என இருவரும் தலா ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 20 ரன் எடுக்கப்பட்டன. மறுபக்கம் நரைன் சுழலில் சிக்கினார் சர்பராஸ் (23 ரன், 18 பந்து). அடுத்த சிறிது நேரத்தில் பிரவிஸ் (41 ரன், 29 பந்து) அவுட்டானார்.
பின், ஷிவம் துபே, ஓவர்டன் ஜோடி சேர்ந்த போதும், கடைசி 2 ஓவரில் 17 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 192 ரன் எடுத்தது. துபே (13), ஓவர்டன் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
நுார் அபாரம்
கொல்கட்டா அணிக்கு ஆலன் (1), நரைன் (24) ஏமாற்றினர். ரகானே 28, ரகுவன்ஷி 27 ரன் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரீன், ஒரே பந்தில் (நுார் அகமது) 'டக்' அவுட்டானார். ரிங்கு சிங் 6 ரன் எடுத்தார்.
கடைசி நேரத்தில் பாவெல் (31), ராமன்தீப் (35) போராடிய போதும், வெற்றிக்கு போதவில்லை. கொல்கட்டா அணி 20 ஓவரில் 160/7 ரன் மட்டும் எடுத்து, இத்தொடரில் நான்காவது தோல்வியை பதிவு செய்தது. சென்னை அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றி பெற்றது.

தொடரும் ஏமாற்றம்
சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பேட்டிங் ஏமாற்றம் தொடர்கிறது. நடப்பு சீசனில் 6, 28, 7, 15, 7 என 5 போட்டியில் 63 ரன் தான் எடுத்துள்ளார். இதன் சராசரி 12.6 ரன்னாக உள்ளது.

Advertisement