ஹோண்டாவுடன் கூட்டணி நிஸான் சி.இ.ஓ., விருப்பம்

புதுடில்லி:ரெனோ நிறுவனத்து டன் கூட்டணியில் உள்ள நிஸான் நிறுவனம், இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்துடனும் கூட்டணி சேர விருப்பம் தெரிவித்திருப்பது, வாகன துறையினர் மற்றும் ஆர்வலர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நிஸான் நிறுவனம், உலகளவில் நிதி நெருக்கடியை சந்தித்த போது, ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்குவதாக அறிவித்தது. ஆனால், கட்டுப்பாடு சிக்கல்கள், கட்டமைப்பு முரண்பாடுகள் காரணமாக இரு நிறுவனங்களும் கூட்டணி சேரவில்லை.

இந்நிலையில் இரு நிறுவனங்களும், இந்திய சந்தைக்காக மீண்டும் கூட்டணி சேருவது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவை, 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் உள்ளபோதிலும் 2 சதவீதத்திற்கு குறைவான சந்தை பங்கை வைத்துள்ளன.

கூட்டணி சேர்ந்தால், ஹோண்டாவின் ஹைபிரிட், நிஸானின் மின்சார தொழில்நுட்பங்கள், தயாரிப்பு தளங்களை பகிர்ந்து சந்தை பங்கை அதிகரிக்க நல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர் வாகன நிபுணர்கள்.

ரெனோ நிறுவனத்துடன் நல்ல உறவு உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், எங்களால் மற்ற வாய்ப்புகளையும் ஆராய முடியும். எனவே, இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து, என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசித்து வருகிறேன்.

இவான் எஸ்பினோஸா

சி.இ.ஓ., நிஸான் மோட்டார்

Advertisement