அடுத்தவர் உழைப்பிற்கு உரிமை கொண்டாடும் தி.மு.க.,!

ஜி.செந்தில்குமார், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகிலேயே ஸ்டிக்கர் ஒட்டுவதில் தலைசிறந்தவர் என்ற பட்டத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தரலாம். அந்த அளவில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போது வரை அடுத்தவரின் சாதனைகளுக்கும், திட்டங்களுக்கும் தன் பெயரை ஒட்டிக் கொண்டு, வெற்று பெருமை பேசி வருகிறார்.

பள்ளியில் சில, 'மக்கு' மாணவர்கள், தேர்வின் போது, அடுத்தவர் பேப்பரை எட்டிப் பார்த்து, ஈயடிச்சான் காப்பி போல் எழுதி விட்டு, ஏதோ தானே கண்விழித்து படித்து எழுதியது போல், விடைத்தாளை அனைவரிடமும் காட்டி மகிழ்வர். அதுபோல், ஸ்டாலினும் கடந்த ஐந்தாண்டுகளாக சுயமாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் சூட்டி, தன்னைத் தானே விளம்பரப்படுத்தி மகிழ்ந்து வருகிறார்.

அவ்வகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில், 7.௫ சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்ததை, தான் போராடியதால் தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்று பொய்யை அவிழ்த்து விட்டார்.

'அப்படியானால், தற்போது உங்கள் ஆட்சி தானே நடக்கிறது... அதை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டியது தானே...' என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியதும், வாயை இறுகமூடிக் கொண்டார்.

இப்படி அடுத்தவர் வியர்வையை முகர்ந்து பார்த்து, அதை ருசிக்க துடிக்கும் ஸ்டாலினும், அவரது கட்சியினரும் தற்போது, கோவை மக்களின் உழைப்பிற்கும் உரிமை கொண்டாட துவங்கியுள்ளனர்.

அதாவது, 'கோவை நகரின் வளர்ச்சி, தி.மு.க.,வின் சாதனை' என்று கூறத் துவங்கியுள்ளனர்.

அப்படியெனில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலுார், விருதுநகர் போன்ற மாவட்டங்கள் பின் தங்கியது யாரால்?

சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை கட்டமைப்புகளில் கூட தோல்வி அடைந்துள்ள தி.மு.க., அரசு, கோவை நகரின் வளர்ச்சிக்கு உரிமை கொண்டாடுகிறது.

அரசு சார்ந்த பெரிய தொழில்கள் கூட இல்லாத நிலையிலும், கோவை முன்னணி நகரமாக உயர்ந்துள்ளது என்றால், அது அம்மாவட்ட மக்களின் உழைப்பு, தொழில் முனைவுத்திறனுக்கு கிடைத்த வெற்றியே தவிர, தி.மு.க.,வின் நிர்வாகத் திறனுக்கு கிடைத்த வெற்றி அல்ல!

lll




நாட்டின் மீது விசுவாசத்தை காட்டுங்கள்! ந.மனோகரன், சிங்காநல்லுார், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது குப்பை மேட்டுக்குத் தான் ஓடுமாம். அதுபோல், தி.மு.க., - எம்.பி., சல்மா இந்த நாட்டின் உணவை உண்டு, இந்திய பார்லிமென்டில் அமர்ந்து கொண்டு, தன் விசுவாசத்தை பாகிஸ்தானுக்கு காட்டியுள்ளார்.

'பாகிஸ்தான் தலையீட்டால் போர் நின்றிருக்கிறது; விஸ்வகுரு பாவம்... சங்கிகள் எப்படி ஜீரணிக்கப்​போகிறீர்கள்?' என்று, பாகிஸ்தானை புகழ்ந்தும், பிரதமர் மோடியை இகழ்ந்தும், தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது சர்ச்சையை கிளப்பவே, 'காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதை தான், பதிவு செய்தேன். அவரை ஒன்றும் சொல்லாமல், இஸ்லாமியர் என்பதால் என்னை விமர்சிக்கின்றனர்' என்று, 'அந்தர் பல்டி' அடித்துள்ளார்.

இதே ஜெய்ராம் ரமேஷ் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கருத்தை பதிவு செய்திருந்தால், அதையும் இப்படித் தான் பதிவிட்டிருப்பாரா?

தன்னை வாழ வைக்கும் நாட்டின் மீது இல்லாத விசுவாசம், இடையில் மதம் மாறியதால் வந்து ஒட்டிக்கொண்ட மதத்தின் மீது வந்து விட்டதா?

இங்குள்ள சில இஸ்லாமியர்கள் இந்தியாவின் மீது வெறுப்பையும், மதத்தின் பெயரால் இஸ்லாமிய நாடுகளின் மீது அதீத பற்றும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இந்த மதப்பற்று விசா இல்லாமல், இவர்களை அந்த நாட்டிற்குள் ஒரு நிமிடம் சுதந்திரமாக உலாவ விட்டு விடுமா?

லட்சக்கணக்கான உய்குர் இஸ்லாமியர்களை சீன அரசு, முகாம்களில் அடைத்து வைத்து துன்புறுத்தியும், அவர்களது குழந்தைகளை பிரித்து, இஸ்லாமிய மத அடையாளத்தை அழிக்கும் விதமாக, சீன கலாசாரத்தில் வளர்ப்பதும் என்று பல அநீதிகளை செய்து வருகிறது.

அதேபோன்று, மியான்மர் அரசு, அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை தர மறுத்து, நாட்டை விட்டு துரத்துகிறது.

நாடு இல்லாத அகதிகளாக, பிச்சைக்காரர்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர், ரோஹிங்கியா முஸ்லிம்கள்.

மதம் தான் பிரதானம் என்றால், இஸ்லாமிய நாடுகள் ஏன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை?

காரணம், இஸ்லாமியர்களாக இருந்தாலும், அவர்கள் வேற்று நாட்டவராகவே பார்க்கப்படுகின்றனர்; இந்திய இஸ்லாமியர்களையும் அப்படித்தான் பார்ப்பர்.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் போதும், இஸ்ரேல் - ஈரான் போரின் போதும், ரஷ்யா - உக்ரைன் போரின் போதும் அங்குள்ள இஸ்லாமியர்களை பத்திரமாக அழைத்து வந்தது, இந்தியா தானே தவிர, பாகிஸ்தான் அல்ல!

நாளை ஏதாவது ஓர் இஸ்லாமிய நாட்டில் இதே சல்மாவிற்கு ஆபத்து என்றாலும், அப்போதும் அவரை காக்கப் போவது இந்தியா தானே தவிர, வேறு எந்த இஸ்லாமிய நாடுகளும் அல்ல!

எனவே, பிறந்த நாட்டிற்கு முதலில் விசுவாசத்தை காட்டுங்கள்; பின் மதத்தின் பேரால், பாகிஸ்தான் மீது தங்கள் பற்றைக் காட்டலாம்!

lll

எப்படி செய்வார்? எல்.எம்.ராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மதுரைக்கு எவ்வளவோ செய்ய நினைத்தேன்... ஆனா முடியலையே!'- என உருகியுள்ளார், மதுரை மத்திய தொகுதி தி.மு.க., வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான தியாகராஜன்.

பெரிய குடும்பத்து வாரிசு, வெளிநாட்டில் படித்தவர் என, மிகப் பெரிய, 'பில்டப்-'புடன் அரசியலுக்கு வந்தவர், தியாகராஜன்.

வந்த வேகத்திலேயே, முதல்வரும் தமிழகத்தின், 'கல்லாப்பெட்டி' எனப்படும் நிதி அமைச்சர் பதவியை துாக்கி கொடுத்தார்.

ஆனால், பாவம் கருணாநிதி வாரிசுகளின், 'நிதி' மோகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, அதுகுறித்து பொது வெளியில் உளற, கடுப்பான தலைமை, 'கல்லாப்பெட்டியை' பிடுங்கி கொண்டு, தகரப் பெட்டியான, ஐ.டி., துறைக்கு மாற்றி விட்டது.

அதன்பின், செய்திகளில் மட்டுமல்ல; தி.மு.க.,வின் மேடைகளில் கூட தியாகராஜனை தேட வேண்டிய நிலை தான்!

இந்நிலையில், தற்போது, மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கி உள்ளார், தியாகராஜன்.

இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் களமிறங்கியிருப்பவர், சினிமா இயக்குநர் சுந்தர்.சி; இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; சுந்தர்.சி, அரண்மனை 5 எடுக்கிறாரோ இல்லையோ, தியாகராஜனின் அரசியல் கோட்டையைத் தகர்க்க, 'ஸ்கிரிப்ட்' ரெடி செய்து விட்டார்.

அதனால், அனுதாப ஓட்டு பெற, 'இன்னொரு முறை வாய்ப்பு கொடுங்க, நான் நினைச்சதெல்லாம் செய்றேன்' என்கிறார், தியாகராஜன்.

ஐந்து ஆண்டுகள் கையில் அதிகாரம் இருந்தபோது, நினைத்ததை செய்ய முடியாதவர், இனி எப்படி செய்வாராம்?

lll

Advertisement