விதான் சவுதாவில் அமர்ந்திருந்தால் பிரச்னைகள் சரியாகி விடுமா? சித்தராமையாவுக்கு குமாரசாமி கேள்வி

பெங்களூரு: ''விதான் சவுதாவின் மூன்றாவது மாடியில் அமர்ந்து, ஆட்சி நடத்தினால் மாநிலத்தின் பிரச்னைகள் தீர்ந்து விடாது,'' என மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரின் சேஷாத்திரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்தில், அம்பேத்கர் ஜெயந்தி, ஜெகஜீவன்ராம் ஜெயந்தி நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

இதில் மத்திய அமைச்சர் குமாரசாமி பேசியதாவது:

விதான் சவுதாவின், மூன்றாவது மாடியில் அமர்ந்து, ஆட்சி நடத்துவதால் மாநிலத்தின் பிரச்னை தீராது. கிராமம், கிராமமாக சென்று மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அவைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதுவே அம்பேத்கருக்கு செலுத்தும் கவுரவம் ஆகும்.

வில்லன்கள் கிராமங்களுக்கு சென்றால், என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பது, நமக்கு தெரியும். உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் அடிப்படையில், மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பிரமாண பத்திரம் கொடுக்க முடியாது. உண்மையை கூறினால், நாங்கள் வில்லன்களாக பார்க்கப்படுவோம்.

இன்று (நேற்று) காலை, துருவகெரே தாலுகாவின், மாயசந்திராவின் பெண்ணொருவர், ஒரு வீடு கட்டித் தரும்படி வேண்டுகோள் விடுத்தார். அவரிடம் வீட்டுமனை இல்லை. மற்றொரு பெண், கணவரின் சிகிச்சைக்காக 29 லட்சம் ரூபாய் செலவிட்டும், குணமாகவில்லை என்றார்.

இதுபோன்று பல பிரச்னைகளுடன், மக்கள் என்னை தேடி வருகின்றனர். இவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். அம்பேத்கரின் கொள்கைப்படி, கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும்.

முதல்வர் சித்தராமையா, நேற்று (முன் தினம்) பாலம் ஒன்றை திறந்து வைத்தார். இந்த பாலத்துக்கு அவரது பெயரையே வைத்துள்ளனர். அந்த பாலம் கட்ட, 2014ல் அனுமதி அளிக்கப்பட்டது.

மாநாடு வெற்றி வளர்ச்சி என்றால் என்ன என்பது குறித்து, முதல்வர் சித்தராமையா தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். அம்பேத்கர் அரசியல் அமைப்பில், குடிமக்களின் உரிமை என்ன என்பதை விவரித்துள்ளார்.

நான் ஏற்கனவே இரண்டு முறை, முதல்வராகி இருக்கிறேன். மூன்றாவது முறை முதல்வராவது என் கையில் இல்லை. மாநில மக்களின் கையில் உள்ளது.

பெங்களூரு உட்பட மாநிலத்துக்கு நல்லது நடக்க வேண்டுமானால், ம.ஜ.த., கட்டாயம் தேவை. பெங்களூரில் நடத்திய மாநாடு வெற்றி அடைந்தது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் போராட்டத்தின் பலனாக, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வரவுள்ளது. 2029ல் கர்நாடகாவில் 116 சட்டசபை தொகுதிகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளாக இருக்கும். 42 லோக்சபா தொகுதிகள் இருக்கும். நமது கட்சியில் பெண்களின் தலைமையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement