கடையில் டீ போட்டு ஓட்டு சேகரித்த தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில், தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்தின் போது, டீக்கடையில் டீ போட்டு கொடுத்து வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.

திருவள்ளூர் சட்டசபை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., சார்பில் வி.ஜி.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். மூன்றாவது முறையாக களமிறங்கும் இவர், திருவள்ளூர் தொகுதியில் உள்ள கிராமங்கள் தோறும் ஓட்டு சேகரித்து வருகிறார்.

நேற்று காலை வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகர் பகுதியில் ராஜாஜி சாலை, பேருந்து நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடைக்கு சென்ற ராஜேந்திரன், டீ போட்டுக் கொடுத்து, கடைக்கு வந்திருந்தவர்களிடம் ஓட்டு சேகரித்தார்.

பின், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம், துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு சேகரித்தார்.

அப்போது, ராஜேந்திரன் கூறியதாவது:

திருவள்ளூர் தொகுதியில் விளையாட்டு வீரர்களுக்காக, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி பாதை, நீச்சல் குளம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்ததும், விளையாட்டு மைதானத்தை, 'ஸ்டேடியம்' ஆக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை முதல்வர் உதயநிதி, இளைஞர்களின் நலனிற்காக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, அவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் வாயிலாக, தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் சாதனை புரிந்து, பல்வேறு பதக்கங்களை பெற்று, பெருமை சேர்த்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன், திருவள்ளூர் நகர செயலர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், காங்., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., - வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

Advertisement