தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!

35

நமது சிறப்பு நிருபர்




எந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் மற்ற மாநில முதல்வர்களின் ‛‛படையெடுப்பு'' அதிகமாக இருக்கிறது. தேஜ கூட்டணிக்கு தான் இந்தியாவில் அதிக முதல்வர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு முதல் எதிரி ‛‛இண்டி'' கூட்டணியின் முக்கிய கட்சியான திமுக தான். எனவே, திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், தேஜ கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டுகளை பெறவும் இவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்கின்றனர்.

தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்தியப் பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என 6 மாநில முதல்வர்கள் தமிழகம் வந்தனர். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மட்டுமே பிரசாரம் செய்தனர்.



இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தேஜ கூட்டணிக்கு ஆதரவாக பல முதல்வர்கள் வந்த நிலையில் ‛‛இண்டி'' கூட்டணி முதல்வர்களின் வருகை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. உதாரணமாக தமிழகத்தின் அருகே உள்ள கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி போன்றவர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரவில்லை.


இதுபற்றி கருத்து தெரிவிக்கும் அரசியல் நோக்கர்கள், ‛‛தேஜ கூட்டணி முதல்வர்களுக்குள் உள்ள ஒற்றுமை, இண்டி கூட்டணி முதல்வர்களுக்குள் இல்லை. பாஜ கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கும் இண்டி கூட்டணி கட்சிகள், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில் ஒற்றுமையாக இருப்பதில்லை. இவர்கள் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி'' என்கின்றனர். எது எப்படியோ, இண்டி கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாதது தேஜ கூட்டணிக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது.

Advertisement