நிர்வாகிகள் அவிநாசி தொகுதியில் பிரசாரம் ஆதரவின்றி தவிக்கும் ராசிபுரம் த.வெ.க., வேட்பாளர்

ராசிபுரம் : ராசிபுரம் தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனுக்கு ஆதரவாக வேலை செய்ய, கட்சி நிர்வாகிகள் இல்லாததால், தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில், த.வெ.க., சார்பில், முன்னாள் சபா

நாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.


இந்த தொகுதியை முதலில், த.வெ.க., நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் குறிவைத்து ஆதரவாளர்களுடன் கட்சி பணிகளை தொடங்கி நடத்தி வந்தார். இதற்கிடையே, ஒரு பெண் நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்ததாக செந்தில்நாதன் மீது புகார் எழுந்ததையடுத்து, அவர் கட்சிப்பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனால் ராசிபுரம் தொகுதியில் செந்தில்நாதனுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

முன்னாள் சபாநாயகர் தனபால், ஏற்கனவே, ராசிபுரம் தொகுதியில் வெற்றிபெற்று செல்வாக்குடன் இருந்ததை கணக்கில் கொண்டு, அவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வனுக்கு, த.வெ.க., தலைமை வாய்ப்பு வழங்கியது. இதற்கிடையே, மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் மகள் கமலிக்கு, அவிநாசி தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிட சீட் வழங்கியது.
இதனால் அதிருப்தியில் இருந்த செந்தில்நாதன், ராசிபுரத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மட்டும் பெயரளவில் கலந்துகொண்டார். பின், மகள் போட்டியிடும் அவிநாசி தொகுதியில் தேர்தல் வேலைகளை கவனிப்பதற்காக அங்கு கிளம்பி சென்றுவிட்டார். அவர் மட்டுமின்றி, ராசிபுரத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த, 500-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், உறவினர்கள் மற்றும் தொண்டர்களையும் அவிநாசிக்கு தேர்தல் பணிக்காக அழைத்து சென்றுவிட்டார்.
இதனால், ராசிபுரம் தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனுக்கு களத்தில் இறங்கி வேலைசெய்ய போதுமான நிர்வாகிகள் இன்றி தவித்து வருகிறார். குறிப்பாக கிராமப்புறங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்போது வேட்பாளருடன் செல்ல ஆட்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. லோகேஷ் தமிழ்செல்வனின் சொந்த ஊர் சேலம் என்பதால், அவருக்கு உள்ளூர் நிலவரம் குறித்து போதிய அனுபவம் இல்லை. ஆட்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு இல்லாததால், வேட்பாளர் ஏமாற்றத்துடனேயே திரும்பி வருகிறார்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாவட்ட செயலாளர் தன் ஆதரவாளர்களுடன் வேறு தொகுதிக்கு சென்றது, ராசிபுரம், த.வெ.க.,வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், தற்போது தனித்து விடப்பட்ட நிலையில், தேர்தல் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.

Advertisement