சிதம்பரம் அருகே உள்வாங்கிய நெடுஞ்சாலையில் ஒரு பக்க சாலையில் போக்குவரத்து துவக்கம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்வாங்கிய மேம்பால இணைப்பு சாலையில், ஒரு பக்கம் சாலையில் போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது.

விழுப்புரம் - நாகை இடையிலான நான்கு வழிச்சாலையில், காரைமேடு - நாகை இடையிலான இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், மூன்று கட்ட பணி கள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரலில், போக்குவரத்து துவங்கியது.

இந்நிலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்று பாலத்தின், உயரமான இணைப்பு சாலையில், எருக்கண்காட்டுப்படுகை கிராமம் அருகே கடந்த 3ம் தேதி, 200 அடி துாரம் சாலை உள் வாங்கியது.

இதனால்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சிதம்பரம் அடுத்த வேளகுடியில் இருந்து சீர்காழி வரை, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வல்லம்படுகை வழியாக பழைய சாலையில் திருப்பி விடப்பட்டது.

டில்லியில் இருந்து நகாய் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து, உடனடியாக சாலை சீரமைப்பு பணியை துவங்க உத்தரவிட்டனர். அதனையடுத்து, அதிகாரிகள் குழு நியமித்து, பணிகள் போர்க்கால அடிப்படையில் துவங்கியது. முதற்கட்டமாக, உள்வாங்கிய பகுதியில் 240 அடி துாரம் சாலை முற்றிலும் பெயர்த்து எடுக்கப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

போக்குவரத்து துவக்கம் சாலை பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் துரிதமாக வேலை நடந்து வரும் நிலையில், அப்பகுதியில், எதிர் பக்க ஒருவழிச்சாலையில் பாதுகாப்பான முறையில், போக்குவரத்தை துவங்க முடிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, ஒருவழிச்சாலையில் 300 மீட்டர் துாரத்திற்கு, எதிரெதிரே வாகனங்கள் செல்லும் வகையில், தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, நேற்று மாலை முதல் போக்குவரத்து துவங்கப்பட்டது.

ஒரு பக்க சாலையில் போக்குவரத்து துவங்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் குறைவான வேகத்தில், பாதுகாப்பாக செல்லுமாறு நகாய் அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement