பீஹாரில் முதல் முறையாக முதல்வர் பதவியை கைப்பற்றியது பாஜ

13


பாட்னா: பீஹார் முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, 57, இன்று பதவியேற்றார். இதன் மூலம் பீஹாரின் முதல்வர் பதவியை பாஜ முறையாக கைப்பற்றியது.


பீஹார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் இருந்த நிலையில், ராஜ்யசபா எம்.பி.,யாக சமீபத்தில் பொறுப்பேற்றார். இதையடுத்து மாநில கவர்னர் சையத் அட்டா ஹஸ்னைனை சந்தித்து முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.

இதனால் பா.ஜ.,வைச் சேர்ந்தவரும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி, சட்டசபை கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பீஹாரின் புதிய முதல்வராக அவர் இன்று பதவியேற்றார். பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர் பீஹார் முதல்வராக பதவி ஏற்று உள்ளது இதுவே முதன்முறை. ஜனதா தளத்தின் தலைவர் விஜய் குமார் சவுத்ரி துணை முதல்வராகப் பதவியேற்றார்.

யார் இந்த சாம்ராட் சவுத்ரி?



நிதிஷ் குமார் ஆட்சியில், துணை முதல்வராக இருந்தவர் சாம்ராட் சவுத்ரி. குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த இவர், முதலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளத்திலும், அதன்பின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திலும் இருந்துள்ளார். இறுதியாக, கடந்த 2017ல் பா.ஜ.,வில் இணைந்த அவர், 2023ல் அக்கட்சியின் மாநில தலைவராகவும் பொறுப்பேற்றார்.



'இனி, பீஹாரின் நிர்வாகப் பணிகளை புதிய அரசு கவனித்து கொள்ளும். இந்த புதிய அரசிற்கு என் முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும்' என நிதிஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.

Advertisement