மேலப்பூங்குடியில் மின்கம்பத்தால் விபத்து அபாயம்

சிவகங்கை:சிவகங்கை ஒக்கூர் அருகே மேலப்பூங்குடி கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளுக்கு கட்டையால் விவசாயிகள் முட்டு கொடுத்துள்ளனர். பெரும் விபத்து ஏற்படும் முன் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே உள்ளது மேலப்பூங்குடி . இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். விவசாயிகள் கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதி வழியாக செல்லும் மின் கம்பங்களில் கம்பிகள் அனைத்தும் தாழ்வாகவே செல்கிறது. நிலங்களுக்கு கனரக வாகனங்களை கொண்டு வந்து கரும்பு உள்ளிட்ட விவசாய பொருட்களை ஏற்ற விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பத்தில் மரங்களின் கிளைகள் உரசி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இங்குள்ள விவசாயிகள் தங்களின் நிலம் வழியாக தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மரக்கம்பால் முட்டு கொடுத்து உயர்த்தி வைத்துள்ளனர். அதேபோல் ரோட்டோரங்களில் உள்ள சில மின் கம்பங்கள் முழுவதும் தேசம் அடைந்து கான்கிரீட் பூச்சு பெயர்ந்து கம்பிகளில் மட்டுமே நிற்கிறது. பலத்த காற்று அடித்தால் இந்த சேதம் அடைந்துள்ள மின்கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மாவட்ட மின் வாரி அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளையும், சேதமடைந்துள்ள மின் கம்பங்களையும் சீரமைக்க வேண்டும்.

Advertisement