தயார் நிலையில் ஓட்டு சாவடிக்கு தேவையான பொருட்கள்

சூலூர்: ஓட்டு சாவடியில் பயன்படுத்தும் பொருட்கள், சூலூர் தாலுகா அலுவகத்தில் தயார் நிலையில் உள்ளன.

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. சூலூர் தொகுதியில், 385 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த, வாக்காளர் பட்டியல், அழியாத மை, அரக்கு, மெழுகுவர்த்தி, பென்சில், பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள், படிவங்கள், வேட்பாளர்கள் படத்துடன் பெயர் அடங்கிய சுவரொட்டி, ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட, 100 க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை தயார் செய்யும் பணியில் ஊழியர் பலர் ஈடுபட்டனர்.

பொருட்கள் சரிபார்க்கப்பட்டு பிளாஸ்டிக் பெட்டிகளில் வைக்கப்பட்டன. கவர்கள், படிவங்கள் பேக்கில் வைக்கப்பட்டன. இது தவிர செல்போன்கள் வைக்க பை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த சக்கர வண்டி, ஓட்டு பதிவு செய்யும் இடத்தை மறைக்க பயன்படும் அட்டைகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,' மண்டல அலுவலர்கள் இன்று( நேற்று) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடிகளை ஆய்வு செய்தனர். இன்று காலை முதல் வாகனங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு சாவடியில் பயன்படுத்தும் பொருட்கள் ஏற்றப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கு அனுப்பப்பட உள்ளன,' என்றனர்.

Advertisement