பணத்தில் 'மிதக்கிறது' கோவை தேர்தல்: தேர்தல் கமிஷன் வேடிக்கை என குற்றச்சாட்டு
கோவை:கோவையில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு பணம் வினியோகிக்கப்படுவதாக கூறி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈசுவரன் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண வினியோகம் தாராளமாக நடக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு கொடுக்கின்றனர்.
தேர்தல் கமிஷன் இதனை வேடிக்கை பார்க்கிறது. சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் விதிமீறல் என பொதுமக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணம், அரசு கருவூலத்தில் முடங்கிக் கிடக்கிறது.
ஆனால் பணம் கொடுப்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பாக செயல்பட்டு பொதுமக்களை வஞ்சிக்கிறது.
ஓட்டுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்களை பொதுமக்கள் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். இதற்காக நாங்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறோம்.
பண வினியோகத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய தேர்தல் கமிஷன், தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். பண பட்டுவாடா பற்றி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகளை கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.