சூலூரில் பூத் சிலிப்புகள்: 90 சதவீதம் வினியோகம்
சூலூர்: சூலூர் தொகுதியில், பூத் சிலிப் வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில், வரும் ஏப். , 23 ம்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சூலூர் தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் படி, 1 லட்சத்து 47 ஆயிரத்து 868 ஆண்கள், 1 லட்சத்து, 59 ஆயிரத்து, 647 பெண்கள், 101 மூன்றாம் பாலினத்தவர் என, 3 லட்சத்து, 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம், 385 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்புகளை, கடந்த நான்கு நாட்களாக, ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள், வீடு, வீடாக சென்று, தங்களிடம் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகளை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில்,' தொகுதி முழுக்க பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது. வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பூத் சிலிப்புகளை வழங்க அறிவுறுத்தி உள்ளோம். மேலும், ஓட்டு சாவடி எங்குள்ளது என்பதை வாக்காளர்களிடம் கூறி, தவறாமல் ஓட்டளிக்க வேண்டும், ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதுவரை, 90 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டுள்ளன,' என்றனர்.