சிலம்ப விளையாட்டிற்கு அங்கீகாரம் :புதுச்சேரி சிலம்பம் அடிமுறை சங்கம் கோரிக்கை  

பாகூர்: தமிழர்களின் பராம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் மற்றும் அடிமுறைக்கு அங்கீகாரம் வழங்கிடும் பணியை அரசு துரிதப்படுத்திட வேண்டும் என, புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்க செயலாளர் அன்பு நிலவன் விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் பல ஆண்டுகளாக, மாநிலம் முழுதும் பல விளையாட்டு குழுக்களை இணைத்து ஒருங்கிணைந்த மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளை முறையே தேசிய, சர்வதேச சிலம்பம் போட்டிகளில் பங்கேற்க செய்து, பதக்கங்கள் பல குவித்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்து வருகிறோம்.

முறையாக நடத்தப்படும் புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கத்திற்கு, அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இந்நிலையில், புதுச்சேரி விளையாட்டு துறை, மாநிலத்தில் பல ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்காத, மாநில சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கப்படும் என உறுதி அளித்து அதற்கான வேலைகளை துரிதப்படுத்தியது.

சட்டசபை தேர்தலால், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிலம்பம் விளையாட்டை அங்கீகரித்து காலத்தோடு இட ஒதுக்கீடு வழங்கியிருந்தால், இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு கல்வியில் சேர ஒரு வாய்ப்பாக இருக்கும். அங்கீகாரத்தை காலம் தாழ்த்தியதன் விளைவாக, இந்த கல்வியாண்டில் அந்த வாய்ப்பு பறிபோய் உள்ளது. ஆகையால், அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து சிலம்பம் விளையாட்டை அங்கீகரிக்க வேண்டும்.

மற்ற மாநிலங்கள் தங்கள் மாநில பாரம்பரிய கலை விளையாட்டுகளை முதன்மைப்படுத்தி அதற்கு பல அங்கீகார வாய்ப்புகள் வழங்கி வளர்த்தெடுக்கிறது. அது போல், புதுச்சேரி அரசு, தமிழர்களின் கலையான சிலம்பம் மற்றும் அடிமுறை கலைக்கு உரிய அங்கிகாரம் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement