இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் த.வெ.க., வேட்பாளர் அருண்குமார் வாக்குறுதி

திருவள்ளூர்: ''திருவள்ளூர் தொகுதியில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும். கிராமங்களில் சாலை வசதி மேம்படுத்தப்படும்,'' என, த.வெ.க., வேட்பாளர் அருண்குமார் பிரசாரத்தில் உறுதியளித்தார்.

திருவள்ளூர் சட்டசபை தொகுதியில் த.வெ.க., சார்பில் டாக்டர் அருண்குமார் போட்டியிடுகிறார். இவர், இரண்டு நாட்களாக பூண்டி ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று, தொகுதி மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம், பூண்டி ஒன்றியத்தில் அல்லிகுழி, பிளேஸ்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டவர், நேற்று சித்தம்பாக்கம், எறையூர், மொண்ணவேடு, சோமதேவன்பட்டு ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது, கிராமங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டு வந்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது, அருண்குமார் பேசியதாவது:

அல்லிகுழி, பிளேஸ்பாளையம் கிராமங்களில், ஏராளமான அடிப்படை வசதிகள் தேவையாக உள்ளது. சாலை வசதி இல்லாமல், மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பிளேஸ்பாளையத்தில் இருந்து கனகம்மாசத்திரம், ஆந்திர மாநிலம் செல்ல, 4 கி.மீ.,க்கு வனப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்.

கிராமங்களுக்கு தேவையான மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். திருவள்ளூர் தொகுதியில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் முகாம் நடத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கிராம பகுதிகளில் விளையாட்டு திடல் அமைத்து, இளைஞர்களின் விளையாட்டு மேம்பாட்டு திறன் வளர்க்கப்படும். பூண்டி ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில், த.வெ.க., நிர்வாகிகள், திருவள்ளூர் நகராட்சி முன்னாள் தலைவர் பாஸ்கரன், பூண்டி மேற்கு ஒன்றிய செயலர் பிரதாப், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement