செய்யூர் பகுதியில் மணிலா பயிறு வகை கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

செய்யூர்:செய்யூர் பகுதியில் அரசு மணிலா கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட, லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன.

30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.

ஏரி, கிணறு, ஆழ்துளைகிணறு போன்ற பல்வேறு நீர் ஆதாரங்கள் மூலமாக நெல்,மணிலா, கரும்பு,எள்,உளுந்து, தர்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகிறது.

இப்பகுதியில் தற்போது ஜி2, ஜி7,கதிரி உள்ளிட்ட பல்வேறு ரக மணிலா பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஜன.,பிப்., மாதத்தில் பயிரிடப்பட்ட மணிலா தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் மணிலா அறுவடை செய்யும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் கொள்முதல் நிலையம் இல்லாததால், அறுவடை செய்யப்படும் மணிலாவை விவசாயிகள், குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தங்கள் விளைவிக்கும் மணிலாவிற்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

ஆகையால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மணிலா கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement