ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகில் 28 கிலோ கஞ்சாவை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயில் உள்ள பிரதான ரயில் நிலையங்களில், ரயில்வே பாதுகாப்பு படையினர், சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

இந்த நிலையில், திருவொற்றியூர் - பெரம்பூர் இடையே வந்து கொண்டிருந்த, மேற்குவங்க மாநிலம் ஷாலிமர் - சென்ட்ரல் விரைவு ரயிலில், நேற்று சோதனை நடத்தினோம்.

இதில், 'எஸ்5' பெட்டியில், கேட்பாரற்று கிடந்த பைகளில் 28 கிலோ கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு 12 லட்சம் ரூபாய்.

அதேபோல், அசாம் மாநிலம் கவுஹாத்தி - கர்நாடகா மாநிலம் எஸ்.எம்.வி.டி., பெங்களூரு விரைவு ரயிலில், சோதனை செய்தபோது, 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய். பறிமுதல் செய்யப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 28 கிலோ போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement