சூரியசக்தியில் ஒளிரப் போகும் ராஜிவ் உள் விளையாட்டு அரங்கம்: அரசு நிதிச்சுமையை குறைக்க ஏற்பாடு
புதுச்சேரி: ராஜிவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, அரசுக்கு ஏற்படும் மின்சார சுமையைக் குறைக்கும் வகையில், சூரியசக்தி மூலம் இயங்கும் வகையில் மாற்றப்பட உள்ளது.
உப்பளம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் இந்திரா காந்தி விளையாட்டுத் திடல் அமைந்துள்ளது. இங்கு வீரர்களுக்கான நவீன தங்குமிடங்கள், பார்வையாளர்கள் அமர வசதியான மாடங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன. இதன் ஒரு பகுதியாக அமைந்துள்ள ராஜிவ் காந்தி உள்விளையாட்டு அரங்கம், நவீனத் தரத்துடன் குளிரூட்டப்பட்ட வசதியைக் கொண்டுள்ளது.
இங்கு வாலிபால், பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து மற்றும் குத்துச்சண்டை போன்ற பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் நிதியுதவியுடன், இந்த உள்விளையாட்டு அரங்கின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கான ஒப்புதல்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பெறப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் முடிக்கப்பட்டன. தற்போது, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சோலார் பேனல்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் அனைத்தும் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன், போர்க்கால அடிப்படையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, அரங்கம் முழுமையான சூரியசக்தி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றத்தை விளையாட்டுச் சங்கங்கள் வரவேற்றுள்ளன. தற்போது இந்த உள்விளையாட்டு அரங்கத்தைப் பராமரிப்பதில் மிகப்பெரிய சவாலாக இருப்பது அதன் மின்கட்டணமே. அரங்கின் குளிரூட்டும் வசதி மற்றும் மின் விளக்குகளுக்காக மாதந்தோறும் சராசரியாக ரூ.1.50 லட்சம் வரை அரசு மின்கட்டணம் செலுத்தி வருகிறது. விளையாட்டு வீரர்களின் நலன் கருதி, இந்த அரங்கிற்கு ஒரு நாளைக்கு மிகக் குறைந்த வாடகையாக ரூ.15,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
குறைந்த வாடகையை வைத்துக்கொண்டு இவ்வளவு மின்கட்டணத்தைச் செலுத்துவது நிர்வாக ரீதியாகப் பெரும் சுமையாக இருந்து வந்தது.
இதில், சூரியசக்தித் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, பகல் நேரங்களில் தேவைப்படும் மின்சாரம் முழுமையாக சோலார் பேனல்கள் மூலமே உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் லட்சக்கணக்கான ரூபாய் மின்கட்டணச் சுமை வெகுவாகக் குறையும். மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் வெளியீடு குறைக்கப்பட்டு, பசுமை விளையாட்டு வளாகமாக மாறும்.
சேமிக்கப்படும் நிதியைக் கொண்டு விளையாட்டு உபகரணங்களையும், மைதானத்தின் மற்ற வசதிகளையும் மேலும் மேம்படுத்த முடியும். இந்த முடிவு, மற்ற உள்விளையாட்டு அரங்குகளுக்கு முன்னோடியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் சூரிய ஒளியில் மின்னப்போகும் ராஜிவ் காந்தி விளையாட்டு அரங்கம், புதுச்சேரி விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தைத் அளிக்கும்.
மேலும்
-
மின்சார வாகன காத்திருப்பு காலம் 1 மாதம் வரை அதிகரிப்பு
-
கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை
-
செங்கையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு... கொஞ்சமும் அக்கறை காட்டாத மாவட்ட நிர்வாகம்
-
இன்று இனிதாக ... (22.04.2026) கோவை
-
காங்.,ல் பூசல் இல்லை வேட்பாளர்கள் மறுப்பு
-
ஆபத்தான இடத்தில் அரசு பள்ளி மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம்