தபால் ஓட்டு நடைமுறையில் மாற்றம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தபால் ஓட்டு செலுத்தும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களின் ஓட்டுகளை, தபால் ஓட்டுச்சீட்டு வாயிலாக, பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதன்படி, 3.04 லட்சம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், படிவம் 12 வாயிலாக, தபால் ஓட்டளிக்க விண்ணப்பித்துள்ளனர். தபால் ஓட்டு பதிவிற்கான விதிமுறைகளில், தேர்தல் கமிஷன் மாற்றம் செய்துள்ளது.

அதன்படி, படிவம் 12 விண்ணப்பம் வாயிலாக, தபால் ஓட்டளிப்பை தேர்வு செய்துள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அதற்கென அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளில், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.

தபால் ஓட்டுச்சீட்டை, தங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று, பின்னர் தபால் வாயிலாக அனுப்பி வைக்கும் நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது.

ஓட்டுப்பதிவு நாளன்று, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு விபரங்களை புதுப்பிக்க, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு உதவும் வகையில், தேர்தல் கமிஷனின், 'ECINET' செயலியில், புதிய பகுதி தொடங்கப்பட்டு உள்ளது.

ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர்களுக்கு, இந்த செயலி பயன்பாடு தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement