பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'

25


அவிநாசி: அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக, இறுதி கட்ட பிரசாரத்தில், ம.பி. முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று 'ரோடு ஷோ' நடத்தி, பிரசாரம் செய்தார்.


திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதியில் போட்டியிடும், பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து, அவிநாசியில் நேற்று மாலை 'ரோடு ஷோ' நடந்தது. இதில், ம.பி. மாநில முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று முருகனுக்கு ஆதரவு திரட்டினார்.

பிரசாரத்தில், மோகன் யாதவ் பேசியதாவது: அவிநாசி என்னும் புனித பூமியில் தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி எழுச்சி பெற்றுள்ளது. தேசிய ஜனநாய கூட்டணியில் மட்டும் தான், சாதாரண மக்களும் அமைச்சராகவோ, முதல்வராகவோ, பிரதமராகவோ வர முடியும். ஆனால், தி.மு.க.வில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும்.



பிரதமர் மோடி, பெண்களுக்காக கொண்டு வந்த இட ஒதுக்கீடு சட்டத்தை தி.மு.க.வினர் தடுத்துள்ளனர். அவிநாசி கோவில் வாசலில் இருந்து சொல்கிறேன். நமது பாரம்பரியம், கலாசாரம் கோவில்களில் தான் உள்ளது.


ஆனால், தி.மு.க. கோவில்களுக்கு எதிராகவும், சனாதனத்திற்கு எதிராக உள்ளது. தி.மு.க. எதுவும் செய்ய வாய்ப்பு உள்ளது. தி.மு.க.வும், கூட்டணி வைத்துள்ள காங்கிரசும் ஆன்மிகத்துக்கு எதிரானவர்கள். முருகன் வெற்றியை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.




நிறைவு கட்ட பிரசாரத்தில் வேட்பாளர் முருகன் பேசுகையில், ''தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் இது. ஊழல், லஞ்சம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, பழனிசாமியை முதல்வராக அமர வைக்க வேண்டிய நேரம் இது. தமிழகத்தில் நிலவும் இப்பிரச்னைகளுக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி வைப்பார். இரட்டை இன்ஜின் ஆட்சி வந்தால், வளர்ச்சிப் பணிகள் வேகமெடுக்கும்.

போதை பொருள் மூலம் ஈட்டிய பாவ பணத்தில் தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது. இந்த பணத்தை அவிநாசியில் வீடு வீடாக கொடுத்து வருகிறார்கள். அவிநாசியில் 20 ஆயிரம் பேருக்கு வீடு தேவை. அவற்றை நிச்சயம் பெற்றுத் தருகிறேன். அவிநாசி கோவில் வாசலில் இருந்து சொல்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு வீடு கொடுத்தே தீருவோம்,' என்றார்.


பிரசார நிறைவு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. - பா.ஜ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். முன்னதாக, புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய 'ரோடு ஷோ' தேர் நிலையம் அருகில் நிறைவடைந்தது.

Advertisement