தொகுதி வளர்ச்சியை பார்த்து மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள்: காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா பிரசாரம்
சென்னை:''தொகுதியின் வளர்ச்சியை பார்த்து, மக்கள் என்னை மீண்டும் வெற்றி பெற செய்வார்கள்,'' என, காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா கூறினார்.
வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா, பிரசாரத்தின்போது கூறியதாவது: நான் வைத்த கோரிக்கைகளை முதல்வர் உடனுக்குடன் செய்து கொடுத்துள்ளார். இதன் பயனாக, தொகுதியில், 420 கோடி ரூபாய்க்கு மேல் மழைநீர் வடிகால், கால்வாய் கட்ட வெள்ள பாதிப்பு இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பெசன்ட் நகரில் மீன் அங்காடி அமைத்துள்ளோம். கிடப்பில் இருந்த இரண்டு மேம்பாலங்களை திறந்து, கூடுதலாக இரண்டு மேம்பாலங்களை கட்டி திறந்துள்ளோம்.
சுத்திரிக்கப்பட்ட குடிநீர், ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து, பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. வேளச்சேரி ஏரி புனரமைப்பு, ரயில்வே சாலை திறப்பு, திருவான்மியூர், வேளச்சேரி பேருந்து நிலையங்கள் புதுப்பிப்பு, வீராங்கால் கால்வாய் சீரமைப்பு போன்ற பல்வேறு பணிகள் நடந்துள்ளன.
இதனால் வேளச்சேரி தொகுதி அபார வளர்ச்சி அடைந்துள்ளது. தொகுதியின் வளர்ச்சியை பார்த்து, தொகுதி மக்கள் மீண்டும் என்னை வெற்றி பெற செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது, தி.மு.க.,வில் விநாயகமூர்த்தி, துரை கபிலன், காங்கிரசில் விஜய்சேகர், நாகராஜ், கலீல் ரகுமான், முகம்மது இப்ராஹிம், மன்சூர், பிரசன்னா, ரகுமான், வி.சி.க.,வில் இளையா, மக்கள் நீதி மையத்தில் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
***