ஓட்டுச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: தபால் ஓட்டுப்பதிவும் துவக்கம்

சட்டசபை தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. ஓட்டுப்பதிவின் போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் - 1, 2, மற்றும் 3 என நான்கு பேர் பணிகளில் ஈடுபடுவர்.

10 ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கி ஒரு மண்டலம் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் துணை தாசில்தார் நிலையிலான அதிகாரி மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தொகுதிவாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், உடுமலை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள, 307 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,800 பேரும், மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, 294 ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற, 1,412 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று, உடுமலை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு வித்யாசாகர் கல்லுாரியில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவுரி சங்கர் மற்றும் மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.

மடத்துக்குளம் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு, ஜி.வி.ஜி., கல்லுாரியில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், வாக்குச்சாவடி மையத்தை ஓட்டுப்பதிவுக்கு தயார் படுத்துதல், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்தல், ஓட்டுப்பதிவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தேர்தல் படிவங்கள், பொருட்களை பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் மாதிரி ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டுப்பதிவு மேற்கொள்ளும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், பேலட் யூனிட், விவிபேட் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், தங்கள் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தபால் ஓட்டு பதிவு செய்ய படிவம் மற்றும் ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது.

பயிற்சியில் பங்கேற்றவர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர். இரு தொகுதிகளிலும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை, உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான பொது பார்வையாளர் தினேஷ் ஸ்ரீ வத்சவா, செலவின பார்வையாளர் சத்யநாராயண் தாக்கூர் ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி பொள்ளாச்சியில், நேற்று ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.

பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதியில் தேர்தல் அலுவலர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. வால்பாறை தொகுதிக்கான ஓட்டுப்பதிவை, தேர்தல் பார்வையாளர் யசேந்திர சிங் ஆய்வு செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வால்பாறை தொகுதியில் மொத்தம், 360 பேர்; பொள்ளாச்சி தொகுதியில் மொத்தம்,434 பேருக்கு தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும், என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-- நிருபர் குழு -:

Advertisement